விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் முக்கிய ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர். பல ஆண்டுகளாக தனது ரசிகர்களின் ரசனையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் இந்த நிகழ்ச்சி அனைவரையும் திருப்திப்படுத்தும் அளவுக்கு அமைந்து வருவது தனி சிறப்பு. ஜூனியர் சீனியர் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியின் மூலம் பல திறமையாளர்கள் பிரபலமாகி தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளனர்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. வழக்கம்போல ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நேற்று முடிவடைந்தது. இதில் அபீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா என இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 5 பேரில், கிரிஷாங் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக முதல் பரிசை தட்டி சென்றார். அவருக்கு 60,000,00 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் இடத்தை ரிஹானாவுக்கு 5 லட்சம் பரிசும், மூன்றாம் இடத்தை நேஹாவும் 3 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால், இதில் பலரும் நேஹா தான் முதல் பரிசை பெற்று இருக்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், அவருக்கு 3-வது பரிசு கிடைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 2-வது இடம்பெற்ற ரிஹானா நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வேலைக்காரன் படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற கருத்தவெல்லாம் கலீஜாம் என்ற பாடலை பாடியிருந்தார். அப்போது இந்த பாடலுக்கு யாரும் எதுவும் சொல்லாத நிலையில், தற்போது இந்த பாடலில் இடம்பெற்ற கெட்டவார்த்தையை எப்படி குழந்தை பாட அனுமதிக்கலாம் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ‘தற்செயலாக டிவி பார்த்தேன். அப்போது விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் ஃபைனல் போய்க்கொண்டிருக்கிறது.ஒரு 8-வயது (இருக்கலாம்) பெண் குழந்தை ‘கருத்தவன்ல்லாம் கலீஜாம்’ பாட்டை முழு ஈடுபாட்டுடன் பாடிக்கொண்டிருக்கிறது. பாடலின் இடையில் வருகிற ‘தக்காளி’ என்கிற வார்த்தையை அந்தப் பாடகரைப் போலவே அழுத்தமாகச் சத்தமிட்டுச் சொல்கிறது கள்ளமறியா அந்தப் பிஞ்சு உதடுகள்.எனக்கு ‘திக்’கென்கிறது. அது ஒரு கேவலமான கெட்ட வார்த்தையின் இணைச்சொல் என்பது ஆண்கள் எல்லோருக்கும் தெரியும்.
அந்தச் சொல்லைப் பாடினால் ஊரு திட்டும், சென்சார் பிரச்சனை வரும். அதனால் அதே போலவே ஒலிக்கிற இந்தச் சொல்லைச் சொல்லி மகிழ்கிற உயரிய சிந்தனையுடைய பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், நடிகரின் சமூகப் பங்களிப்பு இது. இது ஒரு புறம்!ஆனால், இந்தப் பாடலையும், அந்தக் குறிப்பிட்டச் சொல்லையும் அந்தக் குழந்தைக்கு அட்சரம் பிசகாமல் சொல்லிக்கொடுத்த பெற்றோரையும், இசை ஆசிரியரையும், நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினரையும் தமிழ்ச் சமூகம் காலத்துக்கும் வாழ்த்த வேண்டும்!
கெட்ட வார்த்தைகளைப் பாடித்தான் உங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டிய நிலையில் நீங்களெல்லாம் இருக்கிறீர்களென்றால் அதற்கான தளத்தைத் தேர்ந்தெடுங்கள். ஆண்களுக்கு மட்டும் பெரியவர்களுக்கு மட்டும் என்பது போன்ற எச்சரிக்கையுடன் வெளியிடுங்கள். அதற்குப் பிறகு அது பயனாளரின் பொறுப்பு! இப்படி குழந்தைகளும் கேட்கிற, பாடுகிற வெகுஜன ஊடகமான சினிமாப் பாடல்களுக்குள் நஞ்சை இடைச்சொருகல் செய்து ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் களங்கப்படுத்தாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.