/indian-express-tamil/media/media_files/2025/02/12/7bPakMIVI0fH7NjXX6LK.jpg)
1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. தொடர்ந்து, மனசுக்கேத்த மகராசா என்ற படத்திற்கு இசையமைத்த இவர், 1990-ம் ஆண்டு தனது 3-வது படமாக வைகாசி பொறந்தாச்சு என்ற படத்திற்காக சிறந்த இசைமைப்பாளருக்கான மாநில அரசின் விருதினை பெற்றிருந்தார். இந்த படத்தின் பாடல்கள் காலம் கடந்து இன்றும் வரவேற்பை பெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாரளாக உருவெடுத்த தேவா, 1992-ம் ஆண்டு மட்டும் 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் ஒன்று தான் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை. ரஜினிகாந்துடன் தேவா இணைந்து பணியாற்றிய முதல் படமான இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் இந்த படத்திற்காக தேவா போட்ட பி.ஜி.எம். தான் ரஜினிகாந்த் டைட்டில் கார்டுக்கு இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில், குஷ்பு மனோரமா, ராதாரவி, சரத்பாபு, ஜனகராஜ், உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாக காரணமாக இருந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் தனது கவிதாலயா நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, ஒருநாள், இயக்குனர் கே.பாலச்சந்தது இசையமைப்பாளர் தேவாவுக்கு போன் செய்து அவசரமாக ஒரு பாடல் கேட்டுள்ளார்.
நாளை ரஜினிகாந்த் – குஷ்பு கால்ஷீட் மாலை 3 மணிக்கு இருக்கு, காலையில் உடனடியாக ஒரு பாட்டு தேவை. நீ போட்டு கொடுக்கனும் என்று சொல்ல, சார் ரஜினி சார் படம், நீங்க தயாரிப்பாளர் இப்படி திடீர்னு கேட்ட எப்படி சார் பாட்டு வரும் என்னால எப்படி முடியும்னு நினைக்கிறீங்க, என்று தேவா கேட்டுள்ளார். உன்னால முடியும்யா, என்று கே.பாலச்சந்தர் சொல்ல, அந்த வார்த்தையை கேட்ட தேவா மறுநாள் காலை, என்ன ராகத்தில் பாடல் போடுகிறோம் என்று தெரியாமல், அத்தனை வாத்தியங்களையும் ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு வரவைத்துள்ளார்.
இசையமைக்க தேவா, பாடல் எழுத வைரமுத்து, படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆகிய 3 பேரும் பாடலை உருவாக்க அமர்ந்திருந்த நிலையில், 7 மணிக்கு தொடங்கிய கம்போசிங்கை சரியாக 7.10 மணிக்கு முடித்துள்ளார் தேவா. அதன்பிறகு அந்த மெட்டுக்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுத, உடனடியாக எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கே.எஸ்.சித்ரா ஆகியோர் பாடல் பாடி முடித்து மதியம் 2 மணிக்கு பாடலை படப்பிடிப்புக்கு அனுப்பியுள்ளனர். அந்த பாடல் தான் ‘’ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.