தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. 70-களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த அவர், அதன்பிறகு தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். சிவாஜி சிவக்குமார் தொடங்கி, தற்போதைய இளம் நடிகர்கள் வரை பலரின் படங்களுக்கு தனது இசையால் வெற்றியை கொடுத்தவர் இளையராஜா.
70-களில் இறுதியில் அறிமுகமாகி இருந்தாலும், அப்போதைய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்த ஏ.வி.எம்.நிறுவனத்துடன் இளையராஜா இணைந்த முதல் படம் முரட்டுக்காளை. ரஜினிகாந்த்தின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த படத்தை எஸ்.பி முத்துராமன் இயக்கியிருந்தார். 1980-ம் ஆண்டு வெளியான முரட்டுக்காளை அந்த ஆண்டின் பெரிய ஹிட் படம்.
ரஜினிகாந்துடன் ரதி, ஒய்.ஜி.மகேந்திரன், சுருளி ராஜன் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தில் வில்லனாக ஜெய்சங்கர் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ரயில் சண்டைக்காட்சி அப்போது பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்துது. இந்த காட்சிக்கு இசையமைக்க இளையராஜா மறுத்துவிட்டதாக படத்தை தயாரித்த ஏ.வி.எம்.நிறுவனத்தின் குமரன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரீ-ரெக்கார்டிங் வரும்போது, இளையராஜா இசையமைப்பார். நான் ரெக்கார்டிங் அறையில் இருந்து பார்ப்பேன். ஒரு காட்சிக்கு இசை சரியாக அமையவில்லை என்றால் நான் அவரிடம் சொல்வேன் உடனடியாக மாற்றிவிடுவார். நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார். கடைசி நாளில், இந்த ரயில் சண்டை காட்சிக்கு இசையமைத்தால் படம் அத்துடன் முடிந்துவிடும். அன்று அவசர மூடில் வந்திருந்த இளையராஜா இந்த காட்சிக்கு இசை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அதே சமயம் எனக்கு அந்த காட்சியில் இசை வைக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது எடிட்டரை அழைத்து இந்த காட்சியில் எனக்கு இசை வேண்டும் என்ன செய்யலாம் என்று கேட்டபோது, நான் செய்து காட்டுகிறேன் உங்களுக்கு பிடித்திருந்தால் வைத்துக்கொள்வோம் என்று சொல்லி அவர் ஒரு இசையை கொடுத்தார். நன்றாக இருந்தது. அதையே பயன்படுத்திக்கொண்டோம். முரட்டுக்காளை படத்தில் ரயில் சண்டைக்காட்சிக்கு இளையராஜா இசை அமைக்கவில்லை என்பதுதான் உண்மை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“