தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய ஒரு படத்தை பார்த்த இசையமைப்பாளர் இளையராஜா படம் எனக்கு பிடிக்கவில்லை. இந்த படம் ஓடாது என்று சொன்னாலும், அந்த படத்திற்கு சிறப்பாக இசையமைத்து பாரதிராஜாவை அழ வைத்துள்ளார் இளையராஜா. அது என்ன படம்?
1977-ம் ஆண்டு கமல்ஹாசன் – ரஜினிகாந்த் – ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தொடர்ந்து புதிய வார்ப்புகள், கிழக்கே போகும் ரயில், டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே கருத்தம்மா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இதில் 1985-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் முதல் மரியாதை.
தமிழ் சினிமாவில் இன்றும் பாராட்டப்படும் ஒரு படமாக உள்ள முதல் மரியாதை படத்தை இயக்கி முடித்த பாரதிராஜா வழக்கம்போல் தனது எழுத்தாளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு பின்னணி இசை இல்லாமல் போட்டு காட்டியுள்ளார். இதில் படத்தை பார்த்த சிவாஜி குடும்பத்தினர் படத்தை வெகுவாக பாராட்டிய நிலையில், சிவாஜி இயக்குனர் பாராதிராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதே சமயம், தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் படம் பிடிக்கவில்லை ஓடாது என்று கூறியுள்ளனர். பின்னணி இசை சேர்ப்புக்காக படம் பார்த்த இளையராஜா இந்த படம் ஓடாது. என்ன படம் எடுத்திருக்க 3 நாள் கூட தாண்டாது என்று கூறியுள்ளார். பாரதிராஜா இந்த நெகடீவ் கருத்துக்களை பாரதிராஜா பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளார்.
இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்காக இசைமைத்த இளையராஜா, பின்னணி இசையுடன் அந்த ரீலை பாரதிராஜாவுக்கு காட்டியுள்ளார். இதை பார்த்த பாரதிராஜா, இளையராஜாவின் கையை பிடித்துக்கொண்டு படம் பிடிக்காமலே இவ்வளவு பிரமாதமாக இசையமைத்திருக்கிறாயே என்று கூறி கண் கலங்கியுள்ளார். இதை பார்த்த இளையராஜா, படம் பிடிக்குது பிடிக்கவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் நான் என் தொழிலுக்கு துரோகம் செய்ய முடியாது. நான் அழைத்தவுடன் சரஸ்வதி வருகிறது என்றால் அதற்கு நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு வெளியான இந்த படம், முதல் 3 நாட்கள் படத்தை பார்க்க தியேட்டருக்கு கூட்டமே இல்லாத நிலையில், மக்களின் பேச்சுக்கள் படத்தை பற்றி பாசிட்டீவாக இருந்ததால் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் வருகை அதிகரித்து முதல் மரியாதை படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் படம் பற்றி நெகடீவாக கருத்து சொன்ன பலருக்கும் பாரதிராஜா பதிலடி கொடுத்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“