தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என்று அழைக்கப்பட்டவர் ராமராஜன், இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், பெரும்பாலும் தான் நடித்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று விரும்புவார். அதேபோல் இவர் நடித்த பெரும்பாலான படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார். அந்த படங்களும் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், ராமராஜன் நடித்த ஒரு படத்தின் கதையை கூட கேட்காமல் பெரிய ஹிட் பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்துள்ளார் இளையராஜா.
1978-ம் ஆண்டு வெளியான மீனாட்சி குங்குமம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராமராஜன், தொடர்ந்து, தெரு விளக்கு, சிவப்பு மல்லி, உள்ளிட்ட சில படங்களில், சிறிய வேடங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு, 1986-ம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் ராமராஜன் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் – விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வெற்றிப்படங்களை கொடுத்த ராமராஜனுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படம் தான் கரகாட்டக்காரன். 1989-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ராமராஜனின் முதல் படத்திற்கு இசையமைத்த கங்கை அமரன் இயக்கியிருந்தார். 2 ஊரில் இருக்கும் கரகாட்ட கோஷ்டிகளுக்கு நடுவில் நடக்கும் மோதலும் காதலும் கலந்த இந்த படத்தை, கவுண்டமணி – செந்தில் கூட்டணியின் காமெடி காட்சிகள் தூக்கி நிறுத்தியது.
ராமராஜன் ஜோடியாக நடித்த கனகா இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் வாகை சந்திரசேகர், சந்தான பாரதி, சண்முகசுந்தரம், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, காந்திமதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற ‘’பாட்டாலே புத்தி சொன்னா’ என்ற பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கங்கை அமரனே எழுதியிருந்தார். பாடலுக்காகவும், காமெடி காட்சிகளுக்காகவும் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் தான் இளையராஜா கதை கேட்காமல் இசையமைத்த படம்.
இந்த படத்தின் கதையை யோசித்த இயக்குனர் கங்கை அமரன், இதற்காக இசையமைக்க, இளையராஜாவிடம் கேட்க, அவாரோ கதை தேவையில்லை. என்ன மாதிரியான பாடல் வேண்டும் என்று கேட்டுவிட்டு, அவர் சொன்ன சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடல்களை அமைத்து கொடுத்துள்ளார். இந்த தகவலை கங்கை அமரனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“