தனது சிம்பொனி இசை நிகழ்ச்சி, எனது பெருமை அல்ல நாட்டின் பெருமை என்று கூறியுள்ள, இளையராஜா, இன்க்ரிடபுள் இந்தியா மாதிரி நான் இன்க்ரிடபுள் இளையராஜா என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்துள்ள இவர், 75 வயதை கடந்த பின்னரும் இன்றும், இளம் இசையமைப்பாளர்களுக்கு, டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் இயற்சிய பல பாடல்கள் இன்றைய இளைஞர்களின் ரிங்டோனாக ஒளித்துக்கொண்டு இருக்கிறது. இசை மட்டுமல்லாமல், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என பன்முக திறமையாளராக வலம் வருகிறார்.
இந்நிலையில், தற்போது இளையராஜா புதிதான சிம்பொனி ஒன்றை இயற்றியுள்ளார். வரும் மார்ச் 8-ந் தேதி லண்டனில் முதல் முறையாக மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில், வேலியன்ட்' (Valiant) என்னும் தலைப்பில் தான் இயற்றியிருக்கும் சிம்பொனி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக முதன்முறையாக அரங்கேற்ற இருக்கிறார்.
இளையராஜாவின் இந்த முயற்சிக்கு, பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை மந்திரி எல்.முருகன், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும், கடந்த சில தினங்களாக, பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் அவரை சந்தித்து தங்களது வாழ்த்தை தெரிவித்து வரும் நிலையில், லண்டன் செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, "சிம்பொனி இசை நிகழ்ச்சி உலகிலேயே தலைசிறந்த இசை திருவிழாவாக நடைபெற உள்ளது. ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும். ரசிகர்களைப் போலவே நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எனது பெருமை அல்ல. நாட்டின் பெருமை, இன்க்ரிடபுள் (Incredible) இந்தியா மாதிரி, நான் இன்க்ரிடபுள் (Incredible) இளையராஜா.
உங்களுக்கே அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்போது எனக்கு எவ்ளோ மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான். உங்களின் பெருமையைதான் லண்டனில் சேர்க்கப் போகிறேன். இதுக்கு மேல யாரும் வரப்போறதும் இல்லை. வந்ததும் இல்லை என்று கூறியுள்ளார். இந்த சந்திப்பை முடித்த இளையராஜா, சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா லண்டன் புறப்பட்டுச் சென்றார்.