இசையமைப்பாளர் இளையராஜா என்னை விட கமல்ஹாசன் படத்திற்கு நல்ல இசையை கொடுத்துள்ளார் என்று மேடையிலேயே ரஜினிகாந்த் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்கள் என்று சொன்னால் கண்டிப்பாக கமல்ஹாசன் – ரஜினிகாந்துக்கு முக்கிய இடம் உண்டு. கமல்ஹாசன் டாப் ஹீரோவாக இருந்த 70-களில் இடையில் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ரஜினிகாந்த்.1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ரஜினிகாந்த்.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், பல போராட்டங்களுக்கு பிறகு நாயகனாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் கமல்ஹாசன். ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இதில் பெரும்பாலான படங்களை இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கி இருந்தார்.
ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியாக நடிக்க தொடங்கிய நிலையில், கமல்ஹாசன் தனது பாணியிலும், ரஜினிகாந்த் தனது ஸ்டைலுக்கே உரிய பாணியிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். தற்போது ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளனர். அதேபோல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தங்களுக்கே உரிய பாணியில் நட்பு பாராட்டி வருகின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன்பிறகு இந்த தகவல் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாக வில்லை. இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் விழாவில் ரஜினிகாந்த் விவாதம் நடத்திய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்திடம் நடிரக சுஹாசினி கேள்விகள் கேட்கிறார். அதற்கு பதில் அளித்து வரும் ரஜினிகாந்த், சினிமா துறையில் இசை மட்டுமல்லாமல் பல துறைகளில் தனது முத்திரையை பதித்தவர் இளையராஜா. பல தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமல் இசையமைத்து கொடுத்துள்ளார். அதேபோல் நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக பல தியாகங்களை செய்தவர் இளையராஜா என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இளையராஜா உங்களுக்காக எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதில் உங்கள் மனதில் நின்ற பாடல் ஒன்றை சொல்ல முடியுமா என்று ரஜினிகாந்திடம் சுஹாசினி கேட்கிறார். இதற்கு தனக்கு தெரிந்த பாடல்களை சொல்லும் ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும் என் படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல மியூசிக் போட்டுருக்காரு என்று சொல்கிறார்.
இதை கேட்ட இளையராஜா நான் அப்படி பாகுபாடு பார்ப்பதில்லை. இசைஎப்படி வருகிறதோ அதை கொடுக்கிறேன். நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். கமல்ஹாசன் நீங்கள் ரஜினி படத்திற்கு தான் நல்ல மியூசிக் போடுறீங்க என்று சொல்கிறார். நீங்கள் மாறி மாறி இப்படி சொல்கிறீர்கள். ஏன. நான் ராமராஜன் படத்திற்கு நல்ல மியூசிக் போடவில்லையா என்று கேட்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil