வீட்டு வாடகை தரவில்லை என்று கூறி தன்மீது புகார் அளித்த வீட்டு உரிமையாளருக்கு ரூ5 கோடி நஷ்டஈடு கேட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, தமிழ் மட்டும்லலாமல், தெலுங்கு மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அடுத்து அவர் இசையமைப்பில் விஜய் நடித்துள்ள கோட் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் யுவன் தனது திறமையை நிரூபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் யுவன் சங்கர் ராஜா ஒரு வீட்டில் தங்கியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளரான ஃபஸீலத்துல் ஜமீலா என்பவர் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், எனது வீட்டில் குடியிருந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரூ20 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். என்னிடம் சொல்லாமலே வீட்டை காலி செய்துவிட்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த புகார் தொடர்பான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன் மீது அவதூறு பரப்பும் வகையில், செயல்பட்டதாக கூறி ஃபஸீலத்துல் ஜமீலாவுக்கு யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில், பல ஆண்டுகளாக பிரபலமான இசையமைப்பாளராக அறியப்படும் என்னை, பற்றி தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியுள்ள ஃபஸீலத்துல் ஜமீலா பேச்சு எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அவர் தனக்கு ரூ5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வக்கீல் நோட்டீஸ் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“