இந்திய சினிமாவில் முதல்முறையாக ஒரு படத்தின் க்ளைமேகஸ் காட்சிக்காக, ஸ்டூடியோவுக்கு வெளியில் 60-க்கு மேற்பட்ட வீனைகள் வைத்து ரீ-ரெக்கார்டிங் பணிகள் நடந்துள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இந்த சாதனையை செய்தது யார்? எந்த படத்தில்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் இரட்டை இசையமைப்பாளர்கள் என்று எடுத்துக்கொண்டால், எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் சங்கர் – கணேஷ். பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர்கள் இவருமே எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் தான். கண்ணதாசன் சிபாரிசு செய்து, 1967-ம் ஆண்டு வெளியான மகராசி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர்களாக அறிமுகமானார்.
இந்த படத்தை சின்னப்ப தேவர் தயாரிக்க அவரது தம்பி, எம்.ஏ.திருமுகம் இயக்கியிருந்தார். இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து, தொடர்ந்து தேவர் பிலிம்ஸ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார். இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த முதல் எம்.ஜி.ஆர் படம், நான் ஏன் பிறந்தேன். 1972-ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அடுத்து அதே ஆண்டு இதய வீணை என்ற படத்திற்கு இசையமைத்திருந்தனர்.
கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. அதேபோல், இந்த படத்தின் க்ளைமேகஸ் காட்சி எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த காட்சிக்கான ரீ-ரெக்கார்டிங் பணிகள் நடைபெற்றபோது, இதுவரை எந்த இசையமைப்பாளர்களும் செய்யாத ஒரு சாதனையை சங்கர் கணேஷ் செய்துள்ளது எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்துள்ளது.
இதய வீணை என்ற படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப, படத்தின் க்ளைமேகஸ் காட்சிக்காக 65 வீணைகள் வைத்து இசையமைத்துள்ளனர். இதில் இந்த 65 வீணைகளையும் வைப்பதற்கு ஸ்டூடியோவில் இடமில்லை என்பதால், ஸ்டூடியோவுக்கு வெளியில் மைக் வைத்து, வெளியில் காக்கா தொல்லை இருக்கும் என்பதால் அவற்றை விரட்டுவதற்காக 20 பேரை வேலைக்கு வைத்து, வெளியில் இருந்து சவுண்ட் வரக்கூடாது என்பதற்காக, மெயின் கேட்டை மூட சொல்லி, மயான அமைதியுடன் ரீ-ரெக்கார்டிங் பணிகளுக்கு இசையமைத்துள்ளனர்.
இந்திய சினிமாவில் இதுவரை எந்த இசையமைப்பாளரும் செய்யாத ஒரு சாதனை என்று சங்கர் கணேஷ் மகன், பாபி சங்கர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“