பணக்கார நாய்களை கடத்தி அதன் மூலம் பணம் பறிக்கும் கும்பலின் தலைவனாக வருகிறார் நாயகன் (வடிவேலு). ஆனால் எதிர்பாராத விதமாக கொடூர வில்லனுடைய நாயை கடத்தி விடுகிறார். அதன் பிறகு அவர் சந்திக்கும் பிரச்சனைகளை கலகலப்பாகவும் காமெடியாகவும் சொல்லியிருக்கும் படமே நாய் சேகர் ரிட்டன்ஸ்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கிறார் வைகை புயல். வழக்கமான தன் நக்கல், நையாண்டியான காமெடி கவுண்டர்களாலும், அசத்தலான உடல் மொழியாலும் படம் முழுக்க திகட்ட திகட்ட சிரிப்பை வாரி வழங்கியிருக்கிறார். அவர் சாதாரணமாக பேசும் வசனங்களும், சாதாரணமாக நடக்கும் நடையும் கூட ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுக்கிறது என்பதை பார்க்கும்போது உண்மையாகவே வைகைப்புயல் கம்-பேக் கொடுத்து விட்டார் என்றே தோன்றுகிறது.
சில ஆண்டுகள் இடைவெளி விட்டு வந்திருந்தாலும், இப்படத்தின் அவருடைய நடிப்பும்,காமெடி காட்சிகளும், வசனங்களும்,தான் ஒரு மகா காமெடி கலைஞன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. சின்ன சின்ன சண்டை காட்சிகளில் கூட சிரிப்பை தர இவரால் மட்டுமே முடியும். காமெடி நாயகனாக மட்டுமல்லாமல் இப்படத்தின் நான்கு பாடல்களையும் பாடி சிறந்த பாடகராகவும் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார் வடிவேலு.
வடிவேலு மட்டுமல்லாமல் இப்படத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களும் செய்யும் காமெடிகள் ஒர்க்அவுட் ஆகியிருப்பது படத்தின் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. குறிப்பாக ஆனந்தராஜ் கேரக்டர் செய்யும் லூட்டிகள் அட்டகாசம். ஆனந்தராஜ் - வடிவேலு காமெடி காட்சிகள் மக்களுக்கு சிரிப்பு விருந்தை பரிமாறியிருக்கிறது. முனிஷ் காந்த், ஷிவாங்கி, ஷிவானி நாராயணன், மனோபாலா, பிரசாந்த் ரெடின் கிங்ஸ்லி என, அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக நடிப்பை கொடுத்திருப்பதுடன் ஆங்காங்கே காமெடியும் செய்து திரைக்கதையை போர் அடிக்காமல் கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்தை மேலும் ஜாலியாக ரசிக்க உதவுகிறது. பாடல்கள் அனைத்தும் அருமை. நாய்களை கடத்தி அதன் மூலம் பணக்காரனாக நினைக்கும் நாயகன் என சாதாரண கதையை வைத்துக்கொண்டு திரைக்கதை முழுவதும் காமெடி பட்டாசுகளை கொளுத்தியிருக்கிறார் இயக்குனர் சுராஜ். வடிவேலுவின் திறமைகளை கச்சிதமாக வெளிக்கொண்டு வந்திருக்கும் இயக்குனர்களுள் சுராஜும் ஒருவர். அதை மீண்டும் ஒரு முறை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் நீளம் மற்றும் சில காமெடி காட்சிகள் மக்களை ஏமாற்றினாலும் பல இடங்களில் காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு கலகலப்பான ஜாலியாக படமாக அமைந்திருக்கிறது நாய் சேகர் ரிட்டன்ஸ். உண்மையாகவே இது வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் ஒரு காமெடி ரிட்டன் தான்.
நவீன் குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.