ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் "வெப்" படம் எப்படி இருக்கிறது?
கதைக்களம்:
ஐடி வேலை செய்யும் நான்கு பெண்கள் ஒரு நாள் இரவு குடித்துவிட்டு கார் ஓட்டிச் செல்கின்றனர்.ஆனால் அடுத்த நாள் போதை தெளிந்து கண் விழித்துப் பார்க்கும்போது பாழடைந்த வீட்டில் நாயகன் நட்ராஜின் கஸ்டடியில் இருக்கின்றனர். நட்ராஜும், அவரது பெண் உதவியாளரும் சேர்ந்து இந்தப் பெண்களுக்கு சாப்பாடு கொடுத்து, போதை மருந்து செலுத்தி, தூங்க வைத்து டார்ச்சர் செய்கின்றனர்.
மேலும் பல பெண்களையும் இந்த வீட்டில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்துகின்றனர். இடையில் சில கொலைகளையும் செய்கிறார் நாயகன். இப்படி கதை செல்ல நட்டி எதற்காக இப்பெண்களைக் கடத்தினார்? ஏன் கொலைகளை செய்கிறார்? இந்தப் பெண்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? என்பதே மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு :
முதல் பாதியில் சைக்கோ வில்லனாகவும் இரண்டாம் பாதியில் நாயகனாகவும் இருமாறுபட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார் நட்டி நட்ராஜ் . நாயகியான ஷில்பா மஞ்சுநாத்தும் அவருடைய தோழிகளும் மது, போதை, கும்மாளம் லூட்டி என நிறைய நகரத்து பெண்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். துணை நடிகர்கள் சிலர் நடித்திருந்தாலும் அவர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இயக்கம் மற்றும் இசை:
அறிமுக இயக்குனர் ஹருண் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நாம் அதிக முறை பார்த்து பழகிய அதே சைக்கோ திரில்லர் கதையை சற்று தூசி தட்டி படமாக எடுத்திருக்கிறார். கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம்.
படம் எப்படி?
முதல் பாதியின் பல காட்சிகள் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அனுபவத்தை கொடுப்பதால் பெரிய அளவில் நம்மால் கதையுடன் ஒன்ற முடியவில்லை.மேலும் அடிக்கடி மொட்டை ராஜேந்திரனின் காமெடிகள் வருவதால் படம் அவ்வப்போது பாதை மாறி செல்வதாகவும் தோன்றுகிறது. இரண்டாம் பாதியில் அடுத்தடுத்த மர்ம முடிச்சிகள் அவிழும் போது சில விறுவிறுப்புகளை திரைக்கதை உருவாக்கி இருப்பதை மறுக்க முடியாது. இறுதி காட்சியில் வரும் சஸ்பென்ஸ் பெரிய ஏமாற்றம்.
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“