Tamil cinema news: கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், இந்தாண்டு பொங்கல் கொண்டாட்டம் கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான ஒன்றாக இருக்கும். ஏனென்றால், தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சம் இன்னும் நீடித்து வருவதால், இந்த பொங்கலுக்கு திரையிட காத்திருந்த பெரிய நட்சத்திரங்களின் படங்கள் பின்னவங்கியுள்ளன. குறிப்பாக நடிகர் அஜித்தின் ‘வலிமை’ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு, பிறகு ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், சினிமா ரசிகர்களின் ஆவலைப் போக்க, இந்த பொங்கலுக்கு ஐந்து நடுத்தர மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வரவுள்ளன. காதல், சண்டை, காமெடி, வீரம், திரில்லர் என பல அம்சங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கின்றன. அந்த 5 படங்கள் எவை? என்பது குறித்து இப்போது ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
- என்ன சொல்ல போகிறாய்
புதுமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘குக் வித் கோமாளி’ அஷ்வின் குமார் லட்சுமிகாந்தன் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கான ஆடியோ வெளியிட்டின் போது அஷ்வின் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. சிலர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்ததையும் பார்க்க முடிந்தது. இதனால், இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஷ்வினுடன் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா என இரண்டு நாயகிகள் தோன்றுகிறார்கள். அவர்களை சுற்றிச் சுழலும் காதல் கதையாக தான் இப்படம் இருக்கும். படத்திற்கு இசை விவேக்-மெர்வின் அமைத்துள்ளனர்.

அஸ்வினுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் இந்தப் படத்துக்கான அதிகாலைக் காட்சிகள் கூட ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. நாய் சேகர்

‘நாய் சேகர்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிகராக அறிமுகமாகிறார். நாயைப் போல நடந்துகொள்ளத் தொடங்கும் ஒரு மனிதனைப் பற்றிய இந்த குடும்ப பொழுதுபோக்கு படத்தை அறிமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். ‘குக்கு வித் கோமாளி’ புகழ் பவித்ரா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த வருட பொங்கல் ரிலீஸ்களில் பாதுகாப்பான வெற்றிப்படங்களில் ஒன்றாக இப்படம் கருதப்படுகிறது.
3. கொம்பு வச்ச சிங்கம்டா
‘சுந்தரபாண்டியன்’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் அவருடைய ஆஸ்தான ஹீரோ சசிகுமாருடன் மீண்டும் இணைகிறார். சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். காமெடிக்கு வழக்கம் போல் நடிகர் சூரி நடிக்கிறார்.

கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா தொற்று பரவல் நீடித்து வந்ததால், பட ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்தப் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ‘சுந்தரபாண்டியன்’ போல் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ மெகா ஹிட் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
4. தேள்
நடனப்புயல் பிரபுதேவா முக்கிய ரோலில் நடித்துள்ள இப்படத்தை, நடிகரும் நடன இயக்குனருமான ஹரிகுமார் இயக்கியுள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார்.

இப்படம் முதலில் டிசம்பர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் அதைத் தள்ளிப் போட்டதால், ஜனவரி 14-ம் தேதி அன்று இப்படம் திரைக்கு வரவுள்ளது.
5. கார்பன்
தனது எதார்த்த நடிப்பில் மிரட்டி வரும் நடிகர் விதார்த் நடித்துள்ள படம் தான் கார்பன். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் (ஜனவரி 13ம் தேதி) இன்று முதல் வெளியாகிறது. படத்தை ஆர் ஸ்ரீனுவாசன் இயக்கியுள்ளார்.

நடிகர் விதார்த்க்கு ஜோடியாகவும் முக்கிய ரோலிலும் நடிகை தன்யா பி நடித்துள்ளார். இப்படம் நடிகர் விதார்த்துக்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“