Entertainment Tamil News: இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. தமிழகத்தின் விருதுநகரில் பிறந்த இவர், 80 களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தார். இதனால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இவரது நடிப்பை பாராட்டும் விதமாக இவருக்கு பத்மஸ்ரீ, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

நடிகை ஸ்ரீ தேவி பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஜான்வி கபூர் ‘தாடக்’ என்ற இந்தி படம் மூலம் “பாலிவுட்” திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடித்த “குஞ்சன் சக்சேனா: கார்கில் கேர்ள்” பல மொழிகளில் வெளிந்து வந்து பெரும் வரவேற்பை பெற்றது. இதில், ஜான்வின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.

தற்போது பாலிவுட்டில் பிஸி நடிகையாக இருக்கும் ஜான்வி சில முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும், சில முக்கிய இயக்குநர்கள் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி பிஸி நடிகையாக வலம் வரும் ஜான்வி எப்போது? தமிழ் படங்களில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், அவரது அப்பா போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த நடிகர் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கியப் பெண்மணிகளில் ஒருவராக நடிப்பார் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை.

இந்நிலையில், போனி கபூர் தயாரிப்பில் ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ள நடிகர் அஜித்தின் “வலிமை” படத்தின் மூலம் அவர் அறிமுகமாக உள்ளார் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

வெளிநாடுகளில் வலிமை படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இணையதளங்களில் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நடிகை ஜான்வி கபூரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் ஜான்வி நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், அவர் கேமியோ ரோலில் நடிக்கிறாரா? அல்லது ஒரு பாடல் காட்சியில் தோன்றுகிறாரா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். ஏனென்றால், ‘வலிமை’ படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யாமி கவுதம், சுமித்ரா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர்.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“