Lyricist Lalithanand Tamil News: தமிழ்த் திரையுலக பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான லலிதானந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மரணமடைந்தார். இந்த செய்தி திரையுலகினர் அனைவரையும் கண்கலங்க செய்திருக்கிறது.

47 வயதான பாடலாசிரியர் லலிதானந்த், ‘அதே நேரம் அதே இடம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அது ஒரு காலம்’ என்ற பாடலை எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அவர், நடிகர் ஜீவா – ஸ்ரேயா நடிப்பில் வெளிவந்த ரௌத்திரம் படத்தில், ‘அடியே உன் கண்கள்’ எனும் பாடலை எழுதினார்.
இதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் வெளியான, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” திரைப்படத்தில், ‘என் வீட்டுல நான் இருந்தேனே’ என்கிற பாடலை எழுதி இருந்தார். இந்தப் பாடல் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிப் பாடலாக அமைந்த நிலையில், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன.

இதன்பிறகு அவர் மாநகரம், காஷ்மோரா, ஜுங்கா, திருமணம் மற்றும் அன்பிற்கிணியல் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதினார். லலிதானந்த் சினிமா பாடல்களோடு நின்று விடாமல் ‘லெமூரியாவில் இருந்த காதலி’ மற்றும் ‘ஒரு எழுமிச்சையின் வரலாறு’ என்கிற இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
தற்போது அவர் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் கொரோனா குமார் படத்திற்காக பாடல் எழுதியுள்ளார். மேலும், இயக்குனர் பாலாஜி சக்திவேலின் படத்திற்காகவும் பாடல்களை எழுதி இருக்கிறார்.

இந்நிலையில், லலிதானந்த் உடல்நலக்குறைவால் கடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். சிறுநீரக பிரச்சினையால் அண்மைக்காலமாக அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். டயாலாசிஸ் செய்யப்பட்டு குணமாகி வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இது தான் அவரது திடீர் மரணத்திற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் திருச்சியில் வசிக்கும் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாடலாசிரியர் லலிதானந்த் மறைவுக்கு அவரது நெருங்கிய நண்பர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், திரையுலகின் முன்னணி பிரபலங்கள் என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“