TamilRockers Threat To Tamil Cinema: தீபாவளி கொண்டாட்டமாக லேட்டஸ்ட் ஹிட் படங்களின் ஹெச்.டி பிரிண்ட்களை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். குறிப்பாக நம்ம வீட்டுப் பிள்ளை, அசுரன், சிவப்பு மஞ்சள் பச்சை படங்களை லீக் செய்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
தீபாவளியையும், சினிமா கொண்டாட்டங்களையும் பிரிக்க முடியாது. இந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெள்ளிக்கிழமை (25-ம் தேதி) விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனாலும் அதற்கு முன்பாகவே லேட்டஸ்ட் ஹிட் படங்களின் ஹெ.டி பிரிண்ட்களை ஆன்லைனில் திருட்டுத் தனமாக வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
குறிப்பாக சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் அண்மையில் வெளியான அசுரன், சித்தார்த் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை ஹெச்.டி தரத்தில் லீக் செய்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். திரையுலகினர் மத்தியில் இது பீதியைக் கிளப்புகிறது.
பிகில், கைதி ஆகிய படங்கள் வெளியாகும் சூழலில், அவற்றையும் தமிழ் ராக்கர்ஸ் திருட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. இதையொட்டியே கைதி படத்தை ஆன் லைனில் இணையதளங்கள் வெளியிட தடை கேட்டு அந்தப் படத் தயாரிப்பாளர் தரப்பில் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றமும் அந்தப் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
எனினும் அவ்வப்போது இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு புதுப்படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே திரையுலகினரின் எதிர்பார்ப்பு. இன்னொருபுறம், புதுப்படங்களுக்கு டிக்கெட் விலை உயர்வு, தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் முதல் பாப்கார்ன் வரை விலை உயர்வு ஆகியனவும் தமிழ் ராக்கர்ஸ் ரசிகர்களை அதிகப்படுத்தியபடியே இருக்கிறது. எனவே திரையுலகமும் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நேரம் இது.