Beast Movie Tamil News: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
பொதுவாக, நடிகர் விஜய் படம் என்றாலே, சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். இந்த நிலையில், தற்போது இளம் இயக்குநர்கள் இயக்கத்தில் அவர் நடித்து வருவது, அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, கோலா மாவு கோகிலா, டாக்டர் போன்ற தொடர் ஹிட் படங்களை கொடுத்துள்ள நெல்சன் இயக்கியிருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கிறது.

பீஸ்ட் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், படம் அடுத்த மாதம் (ஏப்ரல் மாதம்) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பீஸ்ட் படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வவ்போது வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளியாகிய படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அரபிக் குத்து’ பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. யூடியூப்பில் வெளியான 24 மணி நேரத்திற்குள் சுமார் 25 மில்லியன் வியூஸ்களை பெற்றது. தற்போது வரை இந்த பாடல் 111 மில்லியன் வியூஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ‘புகைப்படம்’ இணைய பக்கங்களில் வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருவதால், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புகைப்படம் டப்பிங் அமர்வின் போது எடுக்கப்பட்ட படம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இணைய பக்கத்தில் வெளியாகி இருக்கும் அந்த புகைப்படத்தை சமூக ஊடக தளங்களில் பகிர வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அந்த புகைப்பட பின்னணியில், ஒரு பண்ணைக்குள் விலங்குகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அங்கு நடிகர் விஜய் யாரிடமோ போன் பேசிக்கொண்டிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“