க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி நாகர்கோவிலில் பிறந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து என்.எஸ்.கிருஷ்ணன் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.
அதே போல் சினிமா மட்டுமல்லாமல் அரசியல் தலைவருடனும் நெருக்கமாக இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், ஒருமுறை நாகூரில் இருந்தபோது, அவரை பார்க்க அறிஞர் அண்ணா மற்றும் மா.போ.சி ஆகிய இருவரும் பார்க்க சென்றுள்ளனர். பார்த்து முடிந்தவுடன் மூவரும் அன்று இரவே சென்னை திரும்ப தயாராகியுள்ளனர். ஆனால் மழை பெய்ததால், இன்று இரவு தங்கிவிட்டு, நாளை போகலாம் என்று டிரைவர் கூறியுள்ளார்.
இதை கேட்ட என்.எஸ்.கே, இரவில் பயணம் செய்வது நமக்கு என்ன புதுசா, உனக்கு என்ன பிரச்சனை, தூக்கம் வரும் அதுதானே, அதை பற்றி நீ கவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன் நீ வண்டியை எடு என்று கூறியுள்ளார். வண்டி கிளம்பியவுடன், சிலப்பதிகாரத்தை பற்றி சர்ச்சையாக ஒரு விஷயத்தை பேசியுள்ளார் என்.எஸ்.கிருஷ்ணன். இதை கேட்ட மா.போ.சி ஒரு பக்கம் பேச, அதற்கு நேர்மாறாக அறிஞர் அண்ணா பேச அந்த வண்டி காலை சென்னை வரும்வரை பேச்சு ஓயவில்லை.
சென்னை வந்ததும், மா.போ.சி – அறிஞர் அண்ணா இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு, தனது வீட்டுக்கு செல்லும்போது, என்ன ராஜூ வரும்போது ஒரு இடத்திலாவது கண்ணை சிமிட்டினியா என்று கேட்க, எங்க தூங்குறது, அவர்கள் பேசியதை கேட்டபோது எங்க அடிச்சிக்கிவாங்களோனு இருந்துச்சு, என்று சொல்ல, நீ தூங்கிவிட கூடாது என்பதால் தான் நான் இந்த பிரச்சனையை கிளப்பிவிட்டேன் என்று என்.எஸ்.கே கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“