500 கோடி ரூபாய் பொருட் செலவில் பிரம்மாண்டமாக ராமாயண கதையை தழுவி எடுக்கப்பட்ட பிரபாஸின் "ஆதிபுருஷ்" படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளிவந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில் இப்படம் எந்த அளவிற்கு மக்களை கவர்ந்துள்ளது என்று பார்க்கலாம்.
கதைக்களம் :
தன் அப்பா தசரதர் கொடுத்த வரத்தின் காரணமாக 14 ஆண்டுகள் ராமர் (பிரபாஸ்),தனது மனைவி சீதா (க்ரித்தி சனோன்) மற்றும் தம்பி லக்ஷ்மணனுடன் வனவாசத்தில் இருக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் பொய்மானை வைத்து ராமனையும், லக்ஷ்மணனையும் திசை திருப்பி விட்டு முனிவர் வேடத்தில் வந்து சீதையை, ராவணன் (சைஃப் அலி கான்) கடத்தி செல்கிறார். இதனால் ராமர் அனுமன் (தேவதத்தா நாகே) மற்றும் வானரப்படையின் உதவியுடன் ராமர் பாலத்தைக் கட்டி இலங்கைக்கு சென்று ராவணனை வதம் செய்து சீதையை எப்படி மீட்டு வருகிறார் என்பது தான் படத்தின் கதை.
நடிகர்களின் நடிப்பு :
படத்தின் டீசர் வெளியான போது ராமர் கதாபாத்திரத்திற்கு பிரபாஸ் பொருந்தவே இல்லை என்பது போன்ற பல விமர்சனங்கள் இருந்தன. ஆனால் அவற்றிற்கு பதிலடி தரும் வகையில் இப்படத்தில் ராமராக அவர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவருடைய உடல்மொழி, வசனம், காட்சியமைப்பு என அனைத்துமே அக்கால ராமரை நம் கண் முன்னே நிறுத்துகிறது. ராவணனாக சைஃப் அலிகான் அட்டகாசமாக நடித்திருக்கிறார். மேலும் ஹீரோவிற்கு இணையான ரோலில் அனுமனாக (தேவதத்தா நாகே) தன் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இவை மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே தங்களுடைய சிறப்பான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இயக்கம் மற்றும் இசை :
என்னதான் ராமாயணக் கதையை நாம் பலமுறை படித்திருந்தாலும், பல தொடர்களாக பார்த்திருந்தாலும் இந்த கால 2k கிட்சை கவரும் வகையில் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் சற்று வித்தியாசமாக இந்த காலத்தில் அக்கதை நடந்திருந்தால் எந்த மாதிரியான காட்சி அமைப்புகளும் இருக்குமோ அதை பயன்படுத்தி இருக்கிறார்கள் இதுவே படத்திற்கு பின்னடைவாகவும் அமைந்திருக்கிறது. ஒரு காவிய கதைக்கு தேவையான அளவு இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர், குறிப்பாக ராமர்-சீதை இடையிலான ஒரு காதல் பாடல் நம்மை மெய்மறக்கச் செய்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
படம் எப்படி ?:
படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது ஹீரோ பிரபாஸ். ஒற்றையாலாக படத்தை சுமந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய போஷனை தவிர்த்து பார்த்தால் படத்தில் குறிப்பிடும் படியான சில ஹைலைட் விஷயங்கள் மட்டுமே அமைந்திருப்பதால் முழுமையாக படத்தை கொண்டாட முடியவில்லை. குறிப்பாக ராவணன் சீதையை கடத்திச் செல்லும் போது ஜடாயு நடத்தும் அந்த சண்டைக் காட்சி படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். VFX மற்றும் CG காட்சிகள் ஒரு சில இடங்களில் சொல்லும் படியாக அமைந்திருந்தாலும்,பல இடங்களில் சொதப்பி இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
இந்த கார்ட்டூன் காட்சிகளை எடுப்பதற்காகவா 500 கோடி செலவு செய்திருக்கிறார்கள்? என்று பலரும் கிண்டல் செய்யும் வகையில் படத்தின் பல காட்சிகள் அமைந்திருக்கிறது. மேலும் ராமாயணக் கதை, நாம் அனைவரும் அறிந்ததே என்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நம்மால் எளிதாக யூகிக்க முடிவதால், எந்தவித சுவாரசியமும் இல்லாமல் ஒரு படத்தை பார்த்த உணர்வைதான் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது..
மொத்தத்தில் குழந்தைகளை கவர்வதற்கான சில விஷயங்கள் படத்தில் இடம் பெற்றிருந்தாலும் அது ராமாயண கதையை ரசிக்கும் குடும்பங்களுக்கும், பெரியோர்களுக்கும் எந்த அளவிற்கு இப்படம் பிடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே?
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.