கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற பார்க்கிங் திரைப்படத்தை பல மொழிகளில் ரீமெக் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் பார்க்கிங். ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன் நடித்த இந்த படத்தில் மூத்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்த படம், ஒரே வீட்டில் குடியிருக்கும் இருவருக்கு இடையே ஏற்படும் மோதலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. குறிப்பாக ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
தமிழில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தின் ரீமேக் உரிமை பெரிய தொகை விற்பனை செய்யப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை 4 மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பார்க்கிங் படம் 4 இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்திருந்த இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான பார்க்கிங் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படம் எந்த மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பது தொடர்பான அறிவிப்புக்கு பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“