புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வெளியான படம் பார்க்கிங். எம்.எஸ்.பாஸ்கர் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம், கடந்த டிசம்பர் 1-ந் தேதி வெளியானது. புதுவித கதைக்களத்துடன் வெளியாகியுள்ள இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், 2-வது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனிடையே கோவை கே.ஜி. திரையரங்கில் பார்க்கிங் பட விளம்பர நிகழ்ச்சிக்காக படத்தின் இயக்குனர் ராம்குமார் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் திரையரங்கிற்கு வந்தனர். இந்த நிகழ்ச்சியில், பார்க்கிங் படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களிடையே கலந்துரையாடினார். தொடர்ந்து அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண் அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்த வரவேற்பை விட அதிக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் வெளி வந்தாலும், புதுமுக இயக்குனர் புதுமுக நடிகர்கள் வைத்து குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்தாலும், நல்ல கதை அமைந்தால் படத்திற்கு மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள்.
இந்த ஆண்டில் வெளியான படங்களில் பார்க்கிங் படம் மிகச் சிறந்த படத்தின் பட்டியலில் இடம்பெறும் என விமர்சனங்கள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை முதலமைச்சர் நிவாரண நிதியில் வழங்கியிருக்கிறேன். இதே போல் பலரும் முன் வந்து உதவ வேண்டும் என்று கூறினார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“