தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் கவியரசர் கண்ணதாசன். இவர் தனது முன்னாள் காதலியின் நினைவாக பகவத் கீதையை பயன்படுத்தி எழுதிய ஒரு பாடல் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது என்பது பலரும அறியாத ஒரு தகவல்.
1960- காலக்கட்டங்களில் கவியரசர் கண்ணதாசன், தி.மு.கவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால், கடவுள் மற்றும் இதிகாச புராணங்களை விமர்சனம் செய்ய தொடங்கினார். தி.மு.க தலைவர்களை போல் விமர்சனம் செய்ய வேண்டும் என்று நினைத்த கண்ணதாசன், அதற்காக இதிகாசம் மற்றும் புராணங்களை பற்றி படிக்க தொடங்கினார். அந்த வகையில் தான் இந்துக்களின் புனித நூல் என்று சொல்லப்படும் பகவத் கீதையை படிக்க தொடங்கியுள்ளார்.
கண்ணதாசன் எதற்காக இதை படிக்க தொடங்கினாரோ அதற்கு நேர்மாறாக, இந்த புராணங்களின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கீதையில் படித்த ஒரு வரி அவருக்கு மிகவும் பிடித்து போக, அடிக்கடி அவரது நினைவில் அந்த வரிகள் வந்து போய்யுள்ளது. அந்த நேரத்தில் இயக்குனர் பீம்சிங் தனது பாவ மன்னிப்பு படத்திற்காக, பாடல் கேட்டு கண்ணதாசனிடம் வந்துள்ளார். ஒரு காதல் பாடல் வேண்டும் என்று சொல்லி, அதற்கான கதையின் சூழ்நிலையையும் கூறியுள்ளார்.
கதையின் சூழ்நிலையை கேட்ட கண்ணதாசனுக்கு தனது பழைய காதலியின் நினைவு வந்துள்ளது. அதேபோல் மற்றொரு பக்கம் கீதையில் அவரை கவர்ந்த ஒரு வரியும் நினைவுக்கு வர, அந்த வரியை வைத்தே பாடலை தொடங்கியுள்ளார். அந்த வரி ‘’ருதுக்களில் நானே வசந்தம்’’ என்ற வரிதான். இதை வைத்து கண்ணதாசன் எழுதிய பாடல் தான் ‘’காலங்களில் அவள் வசந்தம்’’ என்ற பாடல். இந்த பாடலில் பகவத் கீதை மற்றும் தனது முன்னாள் காதலியின் நினைவை வைத்து கண்ணதாசன் வரிகளை அமைத்திருப்பார்.
இந்த பாடல் இன்றும் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்த காலக்கட்டத்திலேயே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த பாடலாக நிலைத்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“