Advertisment
Presenting Partner
Desktop GIF

'அவர் நடிகை தான்; ஆனால் குடும்பப் பெண்களை விட உயர்ந்த பண்பு': கண்ணதாசன் பாராட்டைப் பெற்ற ஒரே நடிகை

சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்

author-image
WebDesk
New Update
Kannadasan Devika

கவிஞர் கண்ணதாசன் - நடிகை தேவிகா

தமிழ் சினிமாவில் தனது கவித்துவமான பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். இவர் எழுதிய பாடல்கள் அனைத்து மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தத்துவங்களை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதால் இன்றும் அவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லலாம்.

Advertisment

காதல, சோகம், நகைச்சுவை, சகோதரத்துவம், நம்பிக்கை, துரோகம் உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்துகிற மாதிரியான பல பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன் ஒரு நடிகையை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை 1957-ம் ஆண்டு வெளியான முதலாளி என்ற படத்தின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தேவிகா தான்.

தேவிகாவை பற்றி குமுதம் வார இதழில் வந்த செய்தியை, விரும்பி கேட்டவை என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில்

கண்ணதாசன் அவர்கள் தேவிகா அவர்களைப் பற்றி

சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு; கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு. இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா. அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைக்கிருக்கும் பல நடிகைகளைவிட, நன்றாகவே நடித்தார்; அழகாகவே இருந்தார். வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் வாழ்க்கையில் தோல்வியடைந்தார்.

இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும். என்ன உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள். எந்தக் குடை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத் தானே நான் தேர்ந்தெடுக்க முடியும், என்பேன் நான். படப்பிடிப்பிற்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்யமாட்டார். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.

என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுதுவிடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார். தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான இவர், தெலுங்கைவிடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார். குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று. இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.

குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர். எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை. பாவிஎன்றொரு சொல் தமிழில் உண்டு. இது பாவிஎன்பதன் எதிர்மறை. பிரதட்சிணம் அப்ரதட்சிணம்என்பது போல ஒரு பாவமும் அறியாதவர்என்பதே அதற்குப் பொருள். மனமறிந்து - அல்ல, தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.

ஆண்டவன் நல்லவர்களையே சோதிப்பான்என்றபடி அவருக்கும் சில சோதனைகள் வந்தன. ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார். நந்தன் படைத்த பண்டம், நாய்பாதி, பேய்பாதி என்பார்கள் என் தாயார். அதுபோல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். அதனை எண்ணி, தேவிகா துன்புறவில்லை.

எப்போது அவருக்கு என்ன துன்பம் வந்தாலும் எனக்குத்தான் டெலிபோன் செய்வார். என்னவோ ஆண்டவன், அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே அவருக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது. சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.

துரதிருஷ்டவசமாக எனது மங்கல மங்கைப் படம் பாதியிலேயே நின்று விட்டது. அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல, அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை. லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகை நடிகர்கள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுமையும் சுற்றுப் பயணம் செய்தேன்.

இரண்டு விமானப் படை விமானங்களில் தான் பயணம். விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும். எல்லோரும் மள மளவென்று ஏறிவிடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். எனக்குக் கை கொடுத்து விமானத்திற்குள், இழுத்துக் கொள்வது தேவிகாவே.

ஒரு படத்தில் அவருக்காக, “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானேஎன்ற பாடலை எழுதினேன். என்னிடம் செல்லமாகப் பாட வேண்டும் போல் தேவிகாவுக்குத் தோன்றினால் அந்தப் பாடலைத்தான் பாடுவார். வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடிவிடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா. சினிமாப் படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.

கதை, வசனம், பாட்டு டைரக்ஷன், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது. சமயங்களில், தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன். சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். - தேவிகா... ஒருநாள் கூடப் படப்பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா. என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘ அண்ணனுக்கு என்ன கவலை? என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கிவிடும் தேவிகா.

அவர் ஒரு சினிமா நடிகைதான். ஆனால் பல குடும்பப் பெண்களைவிட உயர்ந்த குணம் படைத்தவர். பிரமிளாஎன்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள் ? என்று கூறியுள்ளார் கண்ணதாசன்

க்ளாசிக் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்த நடிகை தேவிகா பிரபல நடிகை கனகாவின் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Update Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment