திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் இல்லை கவிஞர் க.மு.ஷெரிப் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?
Advertisment
1965-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் திருவிளையாடல். சிவாஜி கணேசன், சாவித்ரி, முத்துராமன், பாலையா நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு கே.பி.மகாதேவன் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,இன்றும் அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு பாடலாக நிலைத்து நிற்கிறது.
அந்த வகையில் பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலில்,சிவாஜி கணேசனின் நடிப்பு பலரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது. ஆணவம் கொண்ட ஒரு கவிஞரை, சிவன் மனிதனாக வந்து பாடம் புகட்டுவார். அப்போது வரும் பாடல் தான் ‘’பாட்டும் நானே பாவமும் நானே’’ என்ற பாடல். இந்த பாடலில் ஒரு ஃபிரேமில் சிவாஜி கணேசன் 5 கேரக்டரில் நடித்திருப்பார்.
இந்த பாடல் பெரிய ஹிட் பாடலாக அமைந்திருந்தாலும், இந்த பாடல் தொடர்பான சர்ச்சை இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் தான் எழுதியிருந்தார். ஆனால், ‘’பாட்டும் நானே பாவமும் நானே’’ பாடலை கண்ணதாசன் எழுதவில்லை கவிஞர் க.மு.ஷெரிப் தான் எழுதினார் என்ற தகவல் உள்ளது. இந்த தகவலுக்கு தொடக்கமாக இருந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
Advertisment
Advertisements
இந்த பாடல் கம்போசிங் நடைபெற்றபோது, கண்ணதாசன் பாடல் எழுத திணறியதாகவும், அப்போது அங்கு வந்த கவிஞர் க.மு.ஷெரிப்பிடம், இயக்குனர் ஏ.பி.நாகராஜன், இந்த சூழ்நிலைக்கான பாடலை எழுத முடியாமல் இருக்கிறோம் என்ற சொல்ல, அப்போது அவர் தான் இந்த பாடலை எழுதியதாகவும், தான் சிவன் பற்றி பாடல் எழுதியது தெரிந்தால் சர்ச்சையாகும் என்பதால் கண்ணதாசன் பெயரில் வரட்டும் என்று அவர் விட்டுக்கொடுத்தாகவும் எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியிருந்தார்.
இதுதான் இந்த சர்ச்சையின் ஆரம்ப புள்ளி. ஆனால் ஜெயகாந்தன் வேறு ஒரு பாடலை குறிப்பிடுவதற்கு பதிலாக இந்த பாடலை குறிப்பிட்டதால், இந்த சர்ச்சை எழுந்துள்ளது. நாடகங்கள் அதிகம் நடத்தப்பட்ட இந்த காலக்கட்டத்தில், நடத்தப்பட்ட ஒரு நாடகத்தில் சித்தர் பாடல்களில் இருந்து 2 வரிகளை எடுத்து ஒரு பாடல் எழுதுகிறார்கள். ‘’இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி’’ என்ற அந்த வாரிகள் பின்னாளில், 1961-ம் ஆண்டு எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிப்பில் வெளியான பணம் பந்தியிலே என்ற படத்தில் கவிஞர் க.மு.ஷெரிப் மறு உருவாக்கம் செய்து பயன்படுத்தியுள்ளார்.
அதே சமயம் நாடகத்தில் இந்த பாடலை பாடி நடித்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன், 1968-ல் திருவருட்செல்வர் என்ற படத்தை இயக்கும்போது இந்த பாடலை பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால் 7 வருடங்களுக்கு முன்பே இந்த பாடல் வேறு படத்தில் வந்துவிட்டது என்பதால், கண்ணதாசனிடம் சொல்லி மாற்றி எழுதி தருமாறு கூறியுள்ளார் ஏ.பி.நாகராஜன். அதை ஏற்றுககொண்டு பக்தி படத்திற்கு தகுந்தார்போல் கண்ணதாசன் வரிகளை மாற்றி எழுதி கொடுக்கிறார்.
இந்த பாடல் தான் ‘’இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கே அலைகின்றான் ஞான தங்கமே’’ என்ற பாடல். இந்த பாடலை குறிப்பிட வந்த ஜெயகாந்தன் தான் தவறுதலாக, ‘’பாட்டும் நானே பாவமும் நானே பாடலை குறிப்பிட்டு எழுதி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த பாடலை எழுதியதாக சொல்லப்படும் கவிஞர் க.மு.ஷெரிப்பே இதை நான் எழுதவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் திருவிளையாடல் படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் இந்த பாடலை கண்ணதாசன் தான் எழுதினார் என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“