எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள கவிஞர் வாலி, நான் இல்லை என்றால் உங்கள் படத்தையே வெளியிட முடியாது என்று எம்.ஜி.ஆரிடமே சவால் விட்டுள்ளார். அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா?
க்ளாசிக் சினிமா தொடங்கி தற்போது டிஜிட்டல் சினிமா வரை பல வெற்றிப்படங்களுக்கு தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்தவர் தான் வாலி. 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள இவர், எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான கவிஞராகவும், கண்ணதாசன் எம்.ஜி.ஆர் பிரிவு வந்தபோது, எம்.ஜி.ஆர் படங்களுக்கு தொடந்து பாடல்கள் எழுதி ஹிட் கொடுத்திருக்கிறார்.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த வாலி அவ்வப்போது அவருடன் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், சிலமுறை அவரிடம் சவால் கூட விட்டுள்ளார், அந்த வகையில் ஒரு சம்பவம் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் முன் பணிகளின் போது நடந்துள்ளது. வாலி வருவதற்கு முன்பு, எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் தான் பாடல்கள் எழுதி வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுவதும் அதன்பிறகு சேர்ந்து கொள்வதும் வழக்கமான ஒன்று.
அந்த வகையில், எம்.ஜி.ஆர், உலகம் சுற்றும் வாலிபன் படம் தொடங்கும்பொது, மோதலில் இருந்த கண்ணதாசன் – எம்ஜி.ஆர் இருவரும் இணைந்துவிட்டனர். இதன் காரணமாக உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு கண்ணதாசனும் பாடல்கள் எழுத ஒப்பந்தமானார். அப்போது ஒருநாள் வாலி, எம்.ஜி.ஆர் இருவரும் காரில் போய்க்கொண்டு இருந்தபோது, உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பணிகள் எப்படி இருக்கிறது நான் எத்தனை பாடல் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் வாலி கேட்டுள்ளார்.
வாலியை வம்பிழுக்க நினைத்த எம்.ஜி.ஆர், இத்தனை நாள் கண்ணதாசன் இல்லை, அதனால் நீங்கள் எழுதினீர்கள். இப்போது தான் அவர் வந்துவிட்டாரே, இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் அவர்தான் எழுதபோகிறார் என்று கூறியுள்ளார். இதை கேட்ட வாலி, என்னை இந்த படத்தில் இருந்து எடுத்தீர்கள் என்றால் இந்த படத்தையே உங்களால் வெளியிட முடியாது. இதை கேட்ட எம்.ஜி.ஆர் கடுமையான கோபம் அடைந்துள்ளார்.
அடுத்து எம்.ஜி.ஆர் உங்களையும் உங்கள் பெயரையும் இந்த படத்தில் இருந்து எடுத்துவிட்டால் படத்தை வெளியிட முடியாதா என்று கோபமாக கேட்க, உடனே, வாலி, சிரித்துக்கொண்டே, ஆமா அண்ணே, அந்த படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன். என் பெயர் வாலி. உங்கள் படத்தின் பெயரில் இருந்து வாலியை எடுத்துவிட்டால், உலகம் சுற்றும் பன் என்று வரும் இந்த படத்தை எப்படி வெளியிடுவீர்கள் என்று கேட்க, எம்.ஜி.ஆர் கோபத்தை மறந்து சிரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“