/indian-express-tamil/media/media_files/2025/06/09/scSPaTc4QmRfnlGY3q8u.jpg)
தமிழ் சினிமாவில் தற்போது பழைய பாடல்களை பயன்படுத்துவது வழக்கமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. சமீபத்தில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட பல படங்களில் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடல்களை பயன்படுத்தியதற்காக காப்புரிமை கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
அவரின் இந்த நடவடிக்கைக்கு, ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் வந்துகொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இடம்பெற்ற தனது மம்பட்டியான் பாடலுக்கு காப்புரிமை கேட்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. இந்த பாடல் மீண்டும் ட்ரெண்ட் ஆனதற்கு நான் தான் அவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும் என்று நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட தியாகராஜன் கூறியிருந்தார்.
இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இளையராஜாவின் பெயரை குறிப்பிட்டு பலரும் இதற்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனிடையே, தான் எழுதிய பாடலின் பல்லவிகள், பல படங்களுக்கு தலைப்புகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அந்த படக்குழுவினர் தன்னிடம் அனுமதி கேட்கவில்லை. மரியாதைக்கு கூட என்னிட்டம் கேட்கவில்லை என்று கவிஞர் வைரமுத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை ஒன்றா இரண்டா...
என்னுடைய
— வைரமுத்து (@Vairamuthu) June 9, 2025
பல்லவிகள் பலவற்றைத்
தமிழ்த் திரையுலகம்
படத் தலைப்புகளாகப்
பயன்படுத்தி இருக்கிறது
அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும்
என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு
மரியாதைக்குக்கூட
ஒரு வார்த்தையும் கேட்டதில்லை
ஒன்றா இரண்டா...
பொன்மாலைப் பொழுது,
கண் சிவந்தால் மண் சிவக்கும்,
இளைய நிலா,…
பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் பல...
சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன். ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.