பாட்டு எழுத யோசித்தேன், அப்போ இளையராஜா ஒரு அறிவுரை சொன்னார்: அடுத்து நான் எழுதிய அனைத்தும் ஹிட்டு: யுகபாரதி ஓபன் டாக்!

பாடல் எழுதுவது தொடர்பாக இளையராஜா தன்னிடம் கூறிய விஷயங்களை, யுகபாரதி முன்னர் ஒரு முறை பகிர்ந்து கொண்டார்.

பாடல் எழுதுவது தொடர்பாக இளையராஜா தன்னிடம் கூறிய விஷயங்களை, யுகபாரதி முன்னர் ஒரு முறை பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Yugabarathi

டியூனை கேட்டவுடன் உனக்கு என்ன தோன்றுகிறதோ இதை எழுது, யோசித்தால் புதிதே வராது என்று இளையராஜா சொன்னார். அந்த அறிவுரைக்கு பின் நான் எழுதிய அனைத்து பாடல்களும் ஹிட்டு தான் என்று கவிஞர் யுகபாரதி கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் திரையுலகில் பாடலாசிரியர்களின் வரிசையில் யுகபாரதிக்கு முதன்மையான இடம் இருக்கிறது என்று கூறலாம். தனது வசீகரிக்கும் வரிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை யுகபாரதி பெற்றுள்ளார். தஞ்சையை பூர்வீகமாக கொண்ட யுகபாரதி, ஆனந்தம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்' பாடல் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்தார்.

இதன் பின்னர், நரசிம்மா, பார்த்திபன் கனவு, ரன், புதிய கீதை, திருமலை, கில்லி, ஜனா, நான் மகான் அல்ல, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா என பல்வேறு படங்களில் இவரது பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. ஸ்டார் ஹீரோக்கள் தொடங்கி புதுமுக நடிகர்கள் வரை பலருக்கும் யுகபாரதி பாடல்கள் எழுதி இருக்கிறார். இந்நிலையில், பாடல் எழுதுவது தொடர்பாக இளையராஜா தன்னிடம் கூறிய விஷயங்களை, யுகபாரதி முன்னர் ஒரு முறை பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, "இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ஒரு முறை பாடல் எழுதுவதற்கு சென்றிருந்தேன். பெரும்பாலும் அவர் ட்யூன் கொடுத்த உடன் அங்கேயே பாடலை எழுத வேண்டும். அதன்படி, அவர் ட்யூன் கொடுத்ததும் சுமார் 30 நிமிடங்களாக பாடல் வரிகளுக்கு யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த நேரத்திற்குள் மேலும் இரண்டு ட்யூன்களை இளையராஜா உருவாக்கி விட்டார். அதன் பின்னர், என்னிடம் வந்து பாடலை எழுதிவிட்டாயா என்று கேட்டார். பாடலுக்காக யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவரிடம் பதிலளித்தேன்.

Advertisment
Advertisements

உடனே, பாட்டு எழுத யோசிக்கிறாயா? என்று என்னிடம் இளையராஜா கேட்டார். யோசிக்காமல் எப்படி பாடல் எழுத முடியும் என்று எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. பாடல் புதிதாக இருக்க வேண்டும் என்று யோசிப்பதாக அவரிடம் கூறினேன். ஆனால், யோசித்தால் புதிதாக ஒன்றும் வராது என இளையராஜா கூறினார். மேலும், யோசனை என்பது அறிவு சார்ந்தது எனவும், கலை என்பது மனது சார்ந்தது எனவும் கூறிய இளையராஜா, ட்யூனைக் கேட்டதும் என்ன தோன்றியதோ அதையே எழுதுமாறு என்னிடம் அறிவுறுத்தினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு நான் எழுதிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. குறிப்பாக, கும்கி, மைனா உள்ளிட்ட பல படங்களுக்கு நான் எழுதிய பாடல் பெரும் வெற்றி பெற்றன" என்று யுகபாரதி தெரிவித்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் அழகு தமிழில் பாடல்கள் எழுதி வெற்றி பெற வைக்கும் பாடல் ஆசிரியர்களில் முக்கியமானவர் யுகபாரதி என்பது குறிப்பிடத்தக்கது. 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: