க.சண்முகவடிவேல்
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் சிவாஜி-எம்.ஜி.ஆர், ரஜினி-கமல் படங்களின் எதிர்ப்பார்ப்பு போட்டிகளை அடுத்து தற்போது அஜித்-விஜய் ஆகியோரின் படங்கள் வெளியாகும் நாளில் அவரவர் ரசிகர்கள் அமர்க்களப்படுத்தும் காட்சிகளை நாம் திரையிலும், பொதுவெளியிலும் காணும் நிலை இருக்கின்றது. அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு அஜித்-விஜய் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி பரபரப்பை ஏற்படுத்த இருக்கின்றது. இந்த பரபரப்புகளுக்கு இடையே பட்டுக்கோட்டையை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் செய்திருக்கும் செயல் தற்போது வைரலாகின்றது.
பட்டுக்கோட்டை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர், அஜித் ரசிகர்கள் வாரிசு படத்தை காண வர வேண்டும் என அழைப்பிதழ் அச்சடித்து அஜித் ரசிகர்களின் வீடுகளுக்கு சென்று அழைப்பிதழுடன் வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை தாம்பூலத்தில் வைத்து உறவினர்களை அழைப்பது போல் அழைப்பு கொடுத்து வருவது அஜித் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளதுடன் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு இரண்டு படங்களும் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி11) தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. பல வருடங்களுக்குப் பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருவது விஜய்-அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு படங்களின் டிரைலர் வெளியானதை தொடர்ந்து இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள் விஜய் படத்தையும், விஜய் ரசிகர்கள் அஜித் படத்தையும் சமூக வலைதளங்களில் கலாய்த்து கொள்வது வழக்கம். இவை ஒருக்கட்டத்தில் எல்லை மீறி சென்றது. ரசிகர்கள் விமர்சனங்கள் மூலம் மோதிக்கொண்டாலும் விஜய், அஜித் இருவருக்கும் புரிதலான நட்பு எப்போதும் தொடர்ந்தது. இந்நிலையில் இருபெரும் ஸ்டார்களின் படங்கள் ஒரே நாளில் தமிழ்நாட்டில் வெளியாவதால் என்ன நடக்கப் போகிறதோ என்ற பேச்சுக்கள் கிளம்பிருக்கின்றது.
விஜய், அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டனர். இருவரது ரசிகர்களும் சேர்ந்து வாரிசு, துணிவு படங்கள் வெற்றியடைய வாழ்த்தி எங்கும் பிளக்ஸ் வைத்து வருகின்றனர். பல ஊர்களில் இது தொடர்வது முன்னெப்போதும் இல்லாத ஆச்சர்யம். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்த விஜய் மக்கள் இயத்தின் நிர்வாகி ஒருவர் ஒரு படி மேலே போய் அழைப்பிதழ் அச்சடித்து அதில் மஞ்சள், பொட்டு வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம் கொடுத்து அஜித் ரசிகர்களை வாரிசு படம் பார்க்க அழைப்பு கொடுத்து வருகிறார். அவரின் செயல் அஜித் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் பட்டுக்கோட்டை நகரத் தலைவரான ஆதி. ராஜாராம், வாரிசு படத்தை காண அல்டிமேட் ஸ்டார் அஜித் ரசிகர்கள் மற்றும் அனைவரும் வாரீர் என அழைப்பிதழ் அச்சடித்துள்ளார். தொடர்ந்து வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் அஜித் ரசிகர்களின் வீடுகளுக்கு செல்லும் அவர் தாம்பூலத்தில் அழைப்பிதழ் உள்ளிட்டவற்றை வைத்து பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் வாரிசு படத்தை காண அவசியம் வர வேண்டும் என அழைப்பு கொடுத்து வருகிறார்.
தன் வீட்டு வீஷேசத்துக்கு அழைப்பது போல் ஆதி.ராஜாராம் அழைப்பது புதுமையாக இருப்பதால் பலராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து ஆதி.ராஜாராமிடம் பேசினோம், தளபதியோட வாரிசு படம் வருவதை திருவிழா போல் கொண்டாட தயாராகி விட்டனர் விஜய் ரசிகர்கள். தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரம், பிளக்ஸ், கோயில்களில் சிறப்பு வழிபாடு, முடி காணிக்கை செலுத்துதல் என வாரிசு படம் வெற்றியடைவதற்காக பலவற்றை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். வாரிசு கூட்டு குடும்பத்தின் உறவை சொல்லும் படம் என கூறப்படுகிறது.
இசை வெளியீட்டு விழாவில் உலகத்தில் அனைத்தையும் வெல்லக்கூடிய ஆயுதம் அன்பு மட்டுமே என்றும் எனக்குப் போட்டி நானே எனவும் கூறியுள்ளார். விஜய் அனைத்து படங்களும் ஓட வேண்டும் என நினைக்க கூடியவர். ரசிகர்களாக எங்களை விசிலடிக்க மட்டும் பயன்படுத்தாமல் ரத்ததானம், கண் தானம் உள்ளிட்ட பல சமூக சேவையில் ஈடுபடுத்தி வருகிறார். அவரின் சொல்லுக்கேற்ப பல ஆண்டுகளாக நான் ரத்ததான முகாம் நடத்தி வருகிறேன். என் உடலை தானம் செய்திருக்கிறேன். பிகில் ரிலீஸான நேரத்தில் அனைவருக்கும் பனை விதை கொடுத்தேன். விஜய், அஜித் ரசிகர்களாகிய நாங்கள் ஒரே குடும்பமாக இருந்து வருகிறோம். அதனை வெளியுலகுக்கு உணர்த்த நினைத்தேன்.

வாரிசு, துணிவு ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் அழைப்பிதழ அச்சடித்து உறவினர்களாக கருதும் அஜித் ரசிகர்களின் இல்லங்களுக்கு சென்று கொடுத்து வருகிறேன். விஜய் மாதிரியே மென்மையான மனசு என அவர்கள் நெகிந்தனர். நாங்களும் துணிவு படத்தை பார்ப்போம். எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை ஆனால் வாரிசு, துணிவு இரண்டு படங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு ஓட வேண்டும் என கூறியுள்ளார்.
எது எப்படியோ பொங்கலுக்கு இரு பெரும் தலைகளின் படங்களும் ஒரே நேரத்தில் வெளிவருவதால் போலீஸாருக்கு தலைவலிதான் போங்க…,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/