சென்ற ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டியை நடத்திய பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து, இன்று படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது. கல்கியின் நாவல் கொடுத்த சுவாரசியத்தை இப்படம் கொடுத்ததா?
கதைக்களம்:
கடல் புயலில் சிக்கி அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் இறந்து விட்டதாக தஞ்சை கோட்டைக்கு தகவல் கிடைக்கிறது. இதனால் அந்த கோட்டையே சோகத்தில் மூழ்குகிறது. ஆதித்த கரிகாலனுக்கு அந்த செய்தி தெரியவர, இதற்கு நந்தினி தான் காரணம் என அவளை கொல்ல படையோடு கிளம்பி தஞ்சை நோக்கி வருகிறான். ஆனால் கடலில் விழுந்த வந்தியதேவனயும், அருள்மொழி வர்மனயும் மந்தாகினி எனும் ஊமை ராணி (ஐஸ்வர்யா ராய்) காப்பாற்றுகிறாள்,
இந்நிலையில் மதுராந்தகனுக்கு மணிமகுடம் சூட்ட சூழ்ச்சிகள் செய்யபடுகிறது. மறுமுனையில் கடம்பூர் மாளிகையில் வைத்து ஆதித்த கரிகாலனை கொல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறாள் நந்தினி. இறுதியில் நந்தினி கரிகாலனை கொன்றாளா? அருள்மொழி வர்மனுக்கு மகுடம் சூட்டப்பட்டதா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையாய் படத்தின் இறுதி காட்சிகள் முடிகிறது.
ஆதித்ய கரிகாலன் (விக்ரம்):
பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தில் விக்ரமிற்கு பெருமளவில் காட்சிகள் இல்லை என்ற விமர்சனம் எழுந்திருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் இப்படத்தின் அவருடைய காட்சிகளும், நடிப்பும் பிரமிக்க வைக்கிறது. அக்காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வீரத்தையும், அவர்கள் வாழ்வில் இருக்கும் துரோகங்களையும், வலிகளையும் தன்னுடைய நடிப்பின் மூலம் ஒரு சேர கலந்து நம்மை மிரட்டி இருக்கிறார் சியான்.
நந்தினி ( ஐஷ்வர்யா ராய்) :
இப்படத்தின் மையமே நந்தினி என்ற கதாபாத்திரம்தான். அதற்கு நூறு மடங்கு கச்சிதமாக தன் நடிப்பின் மூலம் கல்கியின் கதைக்கு உருவம் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யாராய். அவருடைய அழகும், நடிப்பும் ரசிகர்களை அசர வைக்கிறது ஆதித்ய கரிகாலனுடனான அந்த காட்சிகளில், அவருடைய கண்கள் மட்டுமே ஆயிரம் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும். மேலும் ஊமை தாயாக சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் தன்னுடைய எதார்த்தம் நடிப்பின் மூலம் பாராட்டுகளை அள்ளுகிறார்.
மற்ற நடிகர்களின் நடிப்பு:
குந்தவை கதாபாத்திரத்தில் அழகு பொம்மையாக நம்மை வசீகரிக்கிறார் திரிஷா. அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் அவருடைய அழகை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது. குறிப்பாக வந்தியதேவனுடனான காதல் காட்சிகள், கவிதை ரகம். முதல் பாதியில் இருந்த அளவிற்கு வந்தியதேவனுக்கான காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறவில்லை, இருந்தபோதிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை நக்கல், நையாண்டி, வீரம், சோகம் துரோகம் என அனைத்தும் கலந்த கலவையை தன் நடிப்பின் மூலம் கொடுத்திருக்கிறார் கார்த்தி. ராஜராஜ சோழனுக்கே உரிய கம்பீரமான நடை, உடை பாவனை மூலம் ஒரு அரசனாகவே நம் மனதில் நிற்கிறார் ஜெயம் ரவி.
மற்றபடி பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம் சரத்குமார்,பார்த்திபன் விக்ரம் பிரபு என படத்தின் நடித்த அத்துணை நட்சத்திரங்களுமே தங்களுக்கான ரோலை சிறப்பாக செய்து படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார்கள்.
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்:
தமிழ் சினிமாவின் பல ஆண்டுகால கனவான பொன்னியின் செல்வனை திரைப்படமாக நம் முன்னே கொடுத்ததற்கே அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். கதை படித்தவர்கள் கூட இப்படத்தை வியந்து பார்ப்பதற்கு மணிரத்தினத்தின் இயக்கம் மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. விஷ்வலாக இப்படம் நம்மை சோழர்களின் காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது. இசைப்புயல் ரஹ்மான் தன்னுடைய புதுமையான இசையால் படத்தை பல மடங்கு ரசிக்க வைக்கிறார்.
ஒரு சில பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தாலும் அவை கதையோடு கலந்து வருவதால், தொய்வில்லாமல் பாடல்களும் ,இசையும் நம்மை குதூகலப்படுத்துகிறது. நாம் மறந்த பழைய பல இசை வாத்தியங்களின் அழகான இசையை இப்படத்தில் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இசைப்புயல். இப்படி ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை வெற்றிகரமாக எடுப்பதற்கு உழைத்த படத்தின் அத்தனை டெக்னீசியன்களுக்கும் மிகப் பெரிய பாராட்டுக்கள்.
பாசிட்டிவ்ஸ் :
நடிகர்களின் எதார்த்த நடிப்பு.
விறுவிறுப்பான திரைக்கதை.
பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள்.
வித்தியாசமான இசை.
கிளைமாக்ஸ் போர் காட்சிகள்.
நெகட்டிவ்ஸ் :
கல்கியின் ஐந்து பாகங்களையும் வெறும் இரண்டு பாகங்களாக திரையில் கொண்டு வருவது சுலபமான காரியம் இல்லை என்றாலும்,படத்திற்காக ஒரு சில காட்சிகளை சேர்த்திருப்பது,கதை படித்தவர்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் இறுதி காட்சிகள், பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு அதிர்ச்சியாக அமையலாம்.
நாவலை படிக்காதவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய அளவில் பிடிக்கும், நாவலை படித்தவர்களுக்கு ஒரு சில குறைபாடுகள் இருக்கலாம். மொத்தத்தில் நம் முன்னோர்களின் பெருமைகளையும், வீரத்தையும், போர்களையும், யுக்திகளையும் பார்த்த திருப்தியோடு படம் முடிகிறது.
நவீன் சரவணன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil