முன்னணி நடிகரான விஜயகாந்தை முதன் முதலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்திய தருணம் குறித்து பழம்பெரும் நடிகர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் வந்து சாதித்தவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர். ரஜினிகாந்த் படங்களை பார்த்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மதுரையில் இருந்து சென்னை வந்த விஜயகாந்த் ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பு தேடி பல பட நிறுவனங்களை அணுகினார். மேலும் செல்வாக்கு மிக்க பலரை நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார். அதன்பிறகு படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைது பின்னாளில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.
மிகவும் வசதியாக குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த விஜயகாந்த், தன்னைப்போல் சினிமாவில் நுழைய கஷ்டப்படும் பலருக்கும் உதவி செய்துள்ளார். திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு முதன் முதலில் வாய்ப்பு கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். மேலும் இந்தியாவில் எந்த மூலையில் துயரங்கள் நடந்தாலும் அதற்கு முதல் ஆளாக நிவாரணம் வழக்கக்கூடியவர் விஜயகாந்த்.
எம்ஜிஆர் – விஜயகாந்த் இடையே உள்ள ஒற்றுமை
எம்.ஜி.ஆரைப் போலவே எல்லோருக்கும் உதவும் அற்புத குணம் படைத்தவர் கேப்டன் விஜயகாந்த். சில இடங்களில் எம்.ஜி.ஆர் செய்த உதவியை தாண்டி பலருக்கு உதவி செய்துள்ளார். அதனால்தான் கேப்டன் விஜயகாந்தை வைத்து படம் இயக்கிய சிறு நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இப்போதும் விஜயகாந்த் மாதிரி ஒருவரை பார்க்க முடியாது என்று மீடியாக்களில் பேசி வருகின்றனர்.
அதேபோல் விஜயகாந்தை கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் அழைக்கிறார்கள். திரைத்துறையில் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் விஜயகாந்த், கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தாலும், எம்.ஜி.ஆருடன் அதிகம் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கூட கிடைக்கவில்லை. இதனை சாத்தியமாக்கியவர் பழம்பெரும் நடிகர் ராஜேஷ்.
இது குறித்து ராஜேஷ் கூறுகையில்,
விஜயகாந்த் பழக்குவதற்கு எளிமையான மனிதர். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், தொடக்கத்தில் ஒருவருடன் எப்படி பழகினாரே அதேபோலத்தால் பழகுவார். எனது குடும்பத்தில் எனது திருமணம், என் தங்கை திருமணம், எனது மகள் திருமணம் என 3 சுபநிகழ்ச்சிகளில் விஜயகாந்த் கலந்துகொண்டுள்ளார். இதில் எனது தங்கை திருமணத்திற்கு வந்தபோதுதான் எம்.ஜி.ஆர். விஜயகாந்த் சந்திப்பு நடந்தது.
எனது தங்கை திருமணத்திற்கு வந்திருந்த எம்.ஜி.ஆரிடம் விஜயகாந்தை அழைத்துச்சென்று இவர் தான் விஜயகாந்த் என்று அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது எம்.ஜி.ஆரால் கொஞ்சம் பேச முடியாது. விஜயகாந்தை அறிமுகம் செய்தபோது அவரை தனது அருகில் அமர சொன்னார் எம்.ஜி.ஆர். ஆனால் விஜயகாந்த் அமராமல் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது துப்பாக்கியால் சுடுவது போல் சைகை காண்பித்து எப்படி இருக்கிறது என்று விஜயகாந்திடம் கேட்டார். ஒரு ஷூட்டிங்கின்போது துப்பாக்கி சுடும் காட்சியில் விஜயகாந்த் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தாலும் நியூஸ் பேப்பரில் பார்த்தை ஞாபகம் வைத்து விஜயகாந்தை எம்.ஜி.ஆர். நலம் விசாரித்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் பின்னால் சென்று விஜயகாந்த் அமர்ந்துகொண்டார்.
58 நிமிடங்கள் எம்.ஜி.ஆர் எனது தங்கையின் திருமணத்தில் இருந்தார். அதேபோல் விஜயகாந்தும் எம்.ஜி.ஆருடன் அவ்வளவு நேரம் இருந்துவிட்டு சென்றார். பழகுவதற்கு எளிமையான மனிதரான விஜயகாந்த் மற்றவர்களுக்கு சாப்பாடு போடும்போது தனது கையால் போட வேண்டும் என்று நினைப்பவர். அதேபோல் பலருக்கும் சாப்பாடு போட்டவர் தான் விஜயகாந்த் என்று நடிகர் ராஜேஷ் கூறியுள்ளார்.
80களில் உச்சத்தில் இருந்த ரஜினி மற்றும் கமலுக்கு கடும் போட்டி கொடுத்த நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். ஒரு கட்டத்தில் ரஜினிகாந்தையும், கமல்ஹாசனையும் தனது வெற்றிகளால் பயமுறுத்திய விஜயகாந்த் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து முழு ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். கேப்டன் பிரபாகரன், சத்ரியன், புலன்விசாரணை, ஊமை விழிகள் என பல முக்கியமான படங்கள் இவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.