தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான சிம்பு, தனுஷ், விஷால் மற்றும் அதர்வா உள்ளிட்ட நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கி தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், முன்னணி நடிகர்களான சிம்பு, தனுஷ், விஷால் மற்றும் அதர்வா ஆகியோருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் சிம்பு, மீது ஏற்கனவே பல புகார்கள் குவிந்துள்ள நிலையில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுடனான பிரச்சனையில் பலமுறை புகார் அளித்தும் பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவு எட்டப்படவில்லை. இதன் காரணமாக இந்த பிரச்சனையை மேற்கோள் காட்டி நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்த நடிகர் விஷால், சங்கத்தின் பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து அவருக்கு ரெட்கார்டு விதிகக்ப்பட்டுள்ள நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரிக்கும் படத்தின் படப்ப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில்,மீதமுள்ள படப்பிடிப்பு வராமல் காலம் தாழ்த்தி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக நடிகர் தனுஷ் மீது அளிக்கப்பட்ட புகார் காரணமாக அவருக்கு ரெட்கார்டு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாருக்கு அதர்வா சரியான முறையில் பதில் அளிக்காமல் இருப்பதால் அவருக்கு ரெட் கார்டு விதித்துள்ளதாக தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தனுஷ் தற்போது சன்பிச்சர்ஸ் தயாரிப்பில் தனது 50-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதேபோல் சிம்பு அடுத்து ஐசரி கணேசன் படத்திற்காக கதை கேட்டு வருகிறார். விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“