நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய நடிகர் மன்சூர் அலிகான், மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இப்போது சினிமாவில் ரேப் சீன் வைக்க மாட்டேன்கிறார்கள். அடுத்து த்ரிஷாவுடன் நடிக்க போகிறோம் என்றதும் ஓகே ரேப் சீன் இருக்கும், குஷ்புவை தூக்கி போட்ட மாதிரி, ரோஜாவை தூக்கி போட்ட மாதிரி த்ரிஷாவை போடலாமா என்று நினைத்தேன். 150 படங்களில் நான் பார்க்காத ரேப்பா என்று சர்ச்சையாக பேசியிருந்தார்.
மன்சூரின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்த நடிகை த்ரிஷா தனது பதிவில், மன்சூர் அலிகான் போன்றவர்கள் மனிதகுலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் இதுவரை அவருடன் இணைந்து நடிக்காமல் இருந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் அவர் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் வரை சங்கத்தில் இருந்து நீக்கம் செய்ய ஆலோசித்து வருவதாக கூறியிருந்தனர். நடிகர் சங்கத்தின் அறிக்கைக்கு முன்னதாக த்ரிஷாவிடம் தான் பேசியதாக பொய்யான வீடியோ காட்டப்பட்டுள்ளது என்று மன்சூர் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்திருந்தாலும், அவர் அதில் தான் பேசியதில் தவறில்லை என்பது போல் பதிவிட்டிருந்தாக விமர்சனங்கள் எழுந்தது.
இதனிடையே தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா, இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டு மன்சூர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சினிமாவில் பெண்கள் என்றாலே உரு இளக்கார பார்வை உள்ளது. ஆனால் பொது வழியை விட இன்று சினிமா பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், ஆண்களுக்கு நிகரான சமமான மதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் நம்மை சுற்றி போராடி வெற்றி பெற்றிருக்கும் பெண்களுக்கு உறுதுணையாகவும், தூணாகவும் நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் பேச்சு தவறு, எனது நிலையை அவருடைய வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக குரல் எழுப்பிய நிலையிலும், தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல் என சுட்டிக்காட்டி இருக்கிறார். மன்னிப்பு கேட்பது மீசையில் மண் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக் கொள்ள உணர்ந்து கொள்ள, பெருந்தன்மையை கற்றுக் கொள்ள உதவும். எனவே மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பாரதிராஜா அறிவுரை வழங்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.