தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், சில தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு கால்ஷீட் கொடுக்காமல் இருந்தாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவருக்கு ரெட்கார்டு விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தடை நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் ச்ஙகத்தின் தலைமையில் பல்வேறு சங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு கால்ஷீட் கொடுக்காமல் இருப்பதாக கூறி நடிகர் தனுஷ்க்கு தடை விதிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இனி தயாரிப்பாளர்கள் தனுஷ் நடிப்பில் படம் தயாரிக்க முடிவு செய்தால் அதற்கு முன்பாக தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. தனுஷ் மீதான இந்த தடைக்கு, நடிகர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தனுஷ் குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. தயாரிப்பாளர் சங்கம் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற, நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் தனுஷ் மீதான தடையை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறியிருந்தனர். இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், உள்ள தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தில், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பெப்சி உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தனுஷ் 2 படங்களுக்கு அட்வான்ஸ் தொகை பெற்றுவிட்டு, கால்ஷீட் கொடுக்காமல் இருப்பதாக புகார் வந்தது குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், ஒரு தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுப்பதாகவும், ஒரு தயாரிப்பாளருக்கு அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக தனுஷ் கூறியதை தொடர்ந்து, அவர் மீதான தடையை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“