/tamil-ie/media/media_files/uploads/2022/12/Red-giant.jpg)
தமிழ் சினிமாவில் மனுசனா நீ, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கஸாலி தற்போது தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களை வெளியிட்டு வரும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சினிமா விநியோகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் நேர்மை மொத்த சினிமாவையும் பாதிக்கிறதா?
எதிர்பாராத வித்தியாசமான கோணத்தில் ஒரு பார்வை..!
சில திரையரங்க உரிமையாளர்கள், பல விநியோகஸ்தர்கள், பல சிறுபட தயாரிப்பாளர்கள் என்று விசயங்களைச் சேகரித்தபின் கிடைத்த தகவல் இது.
பத்து வருடங்களாக அமைதி காத்த ரெட்ஜெயண்ட் நிறுவனம் அதிகாரத்திற்கு வந்தபின் கடந்த ஒன்றரை வருடங்களாக பெரும்பாலான படங்களை காசு கொடுத்து வாங்காமல் கமிஷன் பேஸிஸ் வகையில் தியேட்டர் ரிலீஸ் செய்துகொண்டிருக்கின்றது.
பொதுவான கணக்குப்படி இதுவரை 1300 கோடியைத் தாண்டி ரெட்ஜெயண்ட் மூலம் மட்டும் விநியோக வியாபாரம் நடந்திருப்பதாகவும், அந்த ரெட்ஜெயண்ட் நிறுவனத்திற்குக் கிடைத்த கமிஷன் தொகை மட்டும் 120 கோடிவரை தேறும் என்று கேள்வி.
இதில் குறிப்பிடத்தகுந்த முக்கியமான விசயம், ரெட்ஜெயண்ட் நிறுவனத்தின் நேர்மையான கணக்கு வழக்குகள்!
தியேட்டரிலிருந்து பணத்தைக் கணக்குப் பார்த்து சரியாக வாங்குவதாக இருக்கட்டும், தங்களுக்கு வந்த தொகையில் கமிஷன் தொகையை மட்டும் கழித்துவிட்டு மொத்தப் பணத்தையும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு உடனடியாகத் தருவதாக இருக்கட்டும்... அத்தனை சுத்தம்!
திமுகவைப் பிடிக்காத தயாரிப்பாளர்கள்கூட ரெட்ஜெயண்ட் நிறுவனத்தைப் பாராட்டுகிறார்கள்.
சரி, இவர்களின் நேர்மை இந்த சினிமாத் துறைக்கு நன்மை தருகிறதா என்றால்... 'இல்லை' என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. கொஞ்சம் அதிர்ச்சியும், கொஞ்சம் ஆச்சர்யமும் கலந்த இந்த விசயத்தைப் பார்ப்போம்.
கடந்த ஒன்றரை வருடங்களில் இவர்கள் மூலம் நடந்த வியாபாரம் ஏறக்குறைய 1500 கோடிவரை (இதில் ஜிஎஸ்டி & உள்ளூர் வரி மற்றும் தியேட்டர் பங்கு இல்லாமல்..! அவற்றையும் சேர்த்தால் 2500 கோடியைத் தாண்டும்).
இந்த மொத்த வருமானமும் அதிகபட்சம் 10 கம்பெனிகளுக்கு மட்டுமே போய்ச் சேர்ந்திருக்கின்றன. பலரும் போட்டிபோட்டு தொழில் செய்த காலத்தில் இந்தத் தொகை பல நூறு நிறுவனங்களுக்குச் சென்றன. ரெட்ஜெயண்ட்டுக்குக் கிடைத்த 120 கோடி ரூபாயை வைத்து அவர்கள் எத்தனை புதிய படங்களைத் தயாரித்திருக்கிறார்கள்?
வெறும் 5 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் என்றால் குறைந்தபட்சம் 20 படங்களைத் தயாரித்திருக்கலாம். அதன்மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். 1000 கோடிக்குமேல் பெற்ற நிறுவனங்கள் நடிகர்களின் சம்பளத்தை அதிகமாக்கியது தவிர்த்து எத்தனை சிறப்பான படங்களைத் தயாரித்திருக்கிறார்கள்?
பணம் சிலரிடம் மட்டும் சேர்ந்து முடங்கியிருக்கிறது. ரெட்ஜெயண்ட் நிறுவனம் நேர்மையாகத் தொழில் செய்வது தவறா? இவர்கள் யாரையும் மிரட்டி, குறைந்த விலைக்கு படங்களை வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இல்லை.
தயாரிப்பாளர்களேதான் இவர்களைத் தேடிச் சென்று படங்களை ரிலீஸ் செய்ய வேண்டுகிறார்கள் என்று பெரும்பாலும் கூறுகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் தேவையான அளவு தியேட்டர் கிடைப்பது! தியேட்டர்காரர்களுக்கும் வேறு ஆப்ஷன் இல்லை. சரி, சில தியேட்டர்காரர்களும், சில விநியோகஸ்தர்களும் சரியான கணக்கு கொடுக்காமல் திருடுகிறார்கள், தயாரிப்பாளர்களை ஏமாறறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நிலவி வந்தது.
குறிப்பாக, இதுவரை சரியான, நேர்மையான கணக்கால் கிடைத்த 1500 கோடி ரூபாய்க்குப் பதில் 1000 கோடிதான் தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்திருக்கும் என்ற கருத்து உண்டு. அதில் உண்மை இல்லாமலில்லை. அதேநேரம், அதிகப்படியாக எடுத்துக்கொண்ட பணத்தை விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் வேறு துறைகளில் முதலீடு செய்யாமல் மறுபடியும் சிறிய & மீடியம் பட்ஜெட் படங்களில்தான் பெரும்பாலும் முதலீடு செய்திருக்கிறார்கள்.
நேரடியாகப் படங்களைத் தயாரித்தும், படங்களுக்கு ஃபைனான்ஸ் கொடுத்தும்! சினிமாவை நம்பியிருந்தவர்கள் கையில் பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருந்தது. சினிமாவில் உழன்றுகொண்டிருக்கும் லட்சக்கணக்கானவர்களின் வீடுகளில் தொடர்ந்து அடுப்பெரிய இவர்களின் திருட்டு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இது ஒருவகையில் மாடர்ன் ராபின்ஹூட்..?
பொருளாதாரம் சிலரிடம் மட்டும் தேங்காமல் அதனை எடுத்து அடிமட்ட மக்களுடன் பகிர்வது..! இப்போது பெரிய படங்களின் வியாபாரம் அமோகமாக இருக்கிறது. பணம் ஒருசிலரிடம் மட்டும் முடங்கிவிட்டது. அந்தப் பெரிய தயாரிப்பாளர்களும் நிறைய யோசித்து கொஞ்சமாக புதிய படங்களைத் தயாரிக்கிறார்கள். ஃபைனான்ஸ் கொடுப்பவர்கள் இப்போது பெரும்பாலும் கொடுக்காமல் அமைதி காக்கிறார்கள்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் - 'சுதந்திரமாக படத்தை வெளியிட முடியாது. கொடுத்த பணம் வருடக்கணக்கில் முடங்கிவிடும். எனவே இப்போதைக்குப் பணம் கொடுப்பதில்லை' என்கிறார்கள். முன்பாவது சிறிய பட்ஜெட் படங்களை யாராவது சிலர் செலவு செய்து ரிலீஸ் செய்ய முன்வந்தார்கள். இப்போது அதற்கும் பெரிய ஆப்பு. சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது முன்பைவிட கஷ்டம்.
சிறிய & மீடியம் பட்ஜெட் படங்களுக்கு 50, 100, 150 என்று கிடைத்த தியேட்டர் வாய்ப்புகள் இப்போது பாதியாகக் குறைந்திருக்கின்றன என்கிறார்கள். வேறு என்னவெல்லாம் சொல்கிறார்கள்? எடுத்து முடித்த படங்கள் மூலம் வரக்கூடிய வருமானம் அவர்கள், அதாவது ரெட்ஜெயண்ட் கம்பெனியின் பார்வை படாமல் சாத்தியமில்லை
ரெட்ஜெயண்ட் நிறுவனம் இதுவரை குறைந்தபட்சம் 50 சிறிய படங்களையாவது தியேட்டர் ரிலீஸ் செய்திருந்தால் சிறிய தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும் அவர்களை நம்பி ஃபைனான்சியர்கள் பணம் கொடுக்க முன் வந்திருப்பார்கள். கொஞ்சம் நல்லவிதமாக பணப்புழக்கம் இருந்திருக்கும்.
இது எல்லாமே கெட்டுப்போய், தமிழ் சினிமாவில் பணப்புழக்கம் குறைந்து வறுமை தென்படத் தொடங்கியிருக்கிறது. இப்போது போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்களெல்லாம் கடந்த ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு தயாரானவை. இப்போதும் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், பண விசயத்தில் நிறைய தடுமாறுகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Redjaint.jpg)
இதற்குத் தீர்வு என்பது இரண்டே வழிகள்தான்.
1. ரெட்ஜெயண்ட் நிறுவனம் தங்கள் வேகத்தைக் குறைத்து, மற்றவர்களையும் தொழில் செய்ய வழி விடவேண்டும்.
சரியான கணக்குகளை அனைவரும் கொடுக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு போட்டாலே போதும், மீறுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
2. அல்லது வருடத்திற்குக் குறைந்தது 75 சிறிய & மீடியம் பட்ஜெட் படங்களை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தியேட்டர் ரிலீஸ் செய்ய வேண்டும்.
நிறைய சுமாரான படங்கள்தான் தேறும். ஆனாலும், பல வகையான படங்கள் வெளியிடப்படுவதால் ஆடியன்ஸுக்கு பல வகையான அனுபவங்கள் கிடைக்கும்.
சிறிய படத் தயாரிப்பாளர்களின் வாழ்விலும் சூரியன் உதித்து விடிவு ஏற்படும்.
சிறிய பட்ஜெட் படங்களை நேர்த்தியாக எடுத்தால்தான் ரிலீஸ் செய்வோம் என்று ரெட்ஜெயண்ட் நிறுவனம் கண்டிசன் போட்டால் இயக்குநர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கங்களும் கூடி நல்ல படங்கள் எடுக்க முனைவார்கள்.
ஒவ்வொரு வருடமும் வெளியாகும் 180-200 படங்களில் 80% படங்கள், அதாவது 150-170 படங்கள் தோல்வியைத் தழுவுவது தவிர்க்கப்பட்டு, 60%-70% படங்கள் வெற்றியடையும் வாய்ப்பு வரலாம்.
இரண்டில் எது நடந்தாலும் எதிர்கால சினிமாவுக்கு நல்லது.
இல்லையேல் எதிர்கால சினிமாவுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஆட்சி அதிகாரத்துக்கே நல்லதல்ல.
பார்ப்போம், என்ன நடக்கிறதென்று! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.