திருட்டு சம்பவம் தொடர்பான போலீசார் விசாரித்ததால் கடுமையான மன உளைச்சலில் இருந்த சினிமா தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டூடியோகிரீன். இந்த நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா, நடிகர் சூர்யாவின் உறவினர் ஆவார். தற்போது சூர்யா நடிப்பில் தயாராகி வரும் கங்குவா படத்தை தயாரித்துள்ள இவர், விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தையும் தாயரித்துள்ளார்.
தங்கலான் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கங்குவா படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில், நகைகள் திருடு போனதால் ஞானவேல்ராஜா சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஞானவெல்ராஜா வீட்டு பணிப்பெண் லட்சுமி என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் அவர் தான் நகையை எடுக்கவில்லை என்றும், விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும் என்று போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தியதால் மனஉளைச்சலில் இருந்த பணிப்பெண் லட்சுமி, இன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஞானவேல்ராஜா வீட்டில் நகை திருடுபோனது, பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றது என இந்த இரு சம்பவங்களும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“