தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய நடிகர் விஜய் மாணவர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்கப்படுத்தியது மிக சிறப்பான விஷயம் என்று தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதற்கு முன்னோட்டமாக தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய் அவர்களுக்கு பரிசளித்து ஊக்குவித்தார். இந்நிகழ்ச்சி நேற்று சென்னை நீலாங்கரை பகுதியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் விஜய் அரசியல் குறித்து பேசியதும், மாணவர்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும் என்றும், அம்பேத்கர், பெரியார் காமராஜர் குறித்து படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் பேசியிருந்தார். இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தயாரிப்பாளர் கே.ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், விஜய் மாணவர்களை அழைத்து ஊக்கப்படுத்தி பாராட்டியது சிறப்பான விஷயம். ஏனென்றால் எதிர்காலமே மாணவர்கள் தான். ஆனால் இதிலும் ஒரு அரசியல் இருக்கிறது. 234 தொகுதிகளில் இருந்தும் தலா 3 மாணவர்களை தேர்வு செய்தால், இந்த மாணவர்களின் பெற்றோர்களின் பேச்சு அந்த தொகுதி முழுவதும் பரவும்.
இதில் தொகுதி என்றாலே அரசியல் ஆகிவிடும். அதன்பிறகு அவர் வழங்கிய பரிசும், பேசிய பேச்சும், கவனம் பெற்றது. அதிலும் அம்பேத்கர், காமராஜர், பெரியார் ஆகியோரை படியுங்கள் என்றார். இவர்கள் மூவருமே மிக பெரிய தலைவர்கள். ஆனால் அவர்களை மட்டும் அல்லாமல் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரையும் படிக்க வேண்டும். இதில் ஜெயலலிதாவை கூட படிக்க வேண்டும்.
அதன்பிறகு ஓட்டு போட உங்கள் பெற்றோர்களிடம் பணம் வாங்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று சொன்னார். இதுதான் அரசியல். நாளை நான் தேர்தலில் போட்டியிட்டால் என்னிடம் பணம் எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்வதைதான் விஜயின் பேச்சு மறைமுகமாக காட்டுகிறது. நேற்றைய தினம் 12 மணி நேரம் விஜய் நின்றுகொண்டே இருந்தார். அந்த நேரத்தில் மாணவர்களுடன் பேசி அவர்களுக்கு பரிசு வழங்கிய விதம், பிறகு அந்த குழந்தைகளுக்கு விருந்து வழங்கிய விதம், இதற்காக அவர்கள் செய்த ஏற்பாடுகள் மிக மிக சிறப்பு. இதில் நிர்வாகத்திறன் நன்றாக இருந்தது.
அதனால் இது அவரின் அரசியல் அடிதான். ஆனால் அவர் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் அளவுக்கு இன்னும் பக்குவப்படவில்லை. எடுத்துக்காட்டாக மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து ஒரு டைலாக் பேசியிருப்பார். இந்தியா ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கருத்துக்களை சொல்லலாம். ஆனால் விஜய் அந்த டைலாக் சொன்னதால் அவர் வீட்டில் இன்கம்டேக்ஸ் ரைடு நடந்தது.
இதன்பிறகு விஜயின் 4-5 படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த படங்களில் எதிலும் அரசியல் டைலாக் இல்லை. அன்றைக்கு அவரின் ரசிகர்கள் அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள். அப்போதே அவர் இதனை கண்டித்து ஒரு போராட்ட களத்தை உருவாக்கி இருந்தால், அவர் அரசியல் தலைவருக்கான தகுதியை பெற்றிருப்பார். ஆனால் அவரிடம் போராட்ட குணம் இல்லை. போராட்ட குணம் இருந்தால் தான் அரசியலில் நிலைக்க முடியும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“