வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார் என்று கூறியது தொடர்பான விவாதம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். பொங்கல் தினத்தில் துணிவு படத்துடன் வெளியாகும் வாரிசு படத்திற்கு தமிழகத்தில் குறைந்த அளவு தியேட்டர்களே ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து பேசிய வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ தமிழகத்தில் விஜய்’ தான் நம்பர் ஒன். சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு வைரலாக பரவியதை தொடர்ந்து பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களை கூறினர். ஆனாலும் விஜயின் கடைசி 6 படங்கள் தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது என்று கூறி தில் ராஜூ தனது கருத்தக்கு ஞாயம் கூறினார்.
இதனிடையே விஜய் தான் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் என்ற கருத்தக்கு எதிராக பேசியுள்ள தயாரிப்பாளர் கே.ராஜன், யூடியூப் சேனல் ஒன்றில் பேசுகையில், கடின உழைப்பின் மூலம் பல வெற்றிகளை கொடுத்து மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் ரஜினிகாந்த். தனது படங்களின் மூலம் தயாரிப்பாளர்களை காப்பற்றியதால் அவர் சூப்பர் ஸ்டார். அவர் படங்களை தயாரித்து நஷ்டமடைந்தவர்கள் 2 சதவீதம் தான்.
அப்படி நஷ்டம் ஆனாலும் தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து உதவும் நல்ல எண்ணம் கொண்டவர் ரஜினிகாந்த். அதனால் தான் அவர் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார். அவர் இருக்கும்போதே மற்றொருவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு சமமாக வேறு எந்த பெயரையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். இப்போதும் அவர் சுப்ரீம் ஸ்டார்தான். அப்படி இருக்கும்போது விஜய் எப்படி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம். விஜய் முன்பு அவரை புகழ்வது தவறிவல்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் என்று புகழ்வதை தவிர்க்க வேண்டும். நம்பர் ஒன் என்பது நிலையானது அல்ல. அற்புதமான படத்தை எந்த இயக்குனர் தருகிறாரோ அதன் மூலம் கிடைக்கும் வெற்றிதான் நம்பர் ஒன். ஹீரோ எல்லாம் ஒன்றும் கிடையாது. இயக்குனர்தான் எல்லாவற்றிற்கும் காரணம். படத்தை வெற்றி பெற வைப்பதே அவர்கள் தான்.
விஜய் நம்பர் ஒன் என்று சொன்னால் எல்லா படமும் ஓடியிருக்க வேண்டும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் அஜித் இருவரும் சமம். பிகில் வலிமை விவேகம் மெர்சல் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. மெர்சல் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களால் அதன்பிறகு ஒரு படத்தை கூட தயாரிக்க முடியவில்லை. அப்புறம் எப்படி நீ நம்பர் ஒன் ஆக முடியும். எப்போதும் படம் தான் நம்பரை தேர்வு செய்யும்.
6 கோடியில் லவ்டுடே படத்தை எடுத்து அதை 100 கோடி வருவாய் எடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அவர்தான் இப்போதைக்கு நம்பர் ஒன் என்று கூறியுள்ளார். கே.ராஜனின் இந்த பேச்சு வைரலாக பரவி வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“