ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறி காக்கா பருந்து கதை இணையத்தில் அதிகம் பேசப்பட்ட நிலையில், தற்போது கலாநிதிமாறன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கிய முந்தைய படமாக பீஸ்ட் கடுமையாக விமர்சனங்களை சந்தித்த நிலையில், தற்போது ஜெயலர் படம் அதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஜெயிலர் படத்தின் புக்கிங் இன்று தொடங்கிய நிலையில், சில மணி நேரங்களில் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை புக் செய்ய தொடங்கிவிட்டனர். வெளிநாடுகளில் சில நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டதால், ஜெயிலர் படத்தின் முதல் நான் வசூல் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பின் உச்சமாக இருந்து வருகிறது.
இதனிடையே கடந்த சில வருடங்களாக சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ள நிலையில், ஜெயிலர் படத்தில் சூப்பர் சுப்பு எழுதிய ஹுக்கும் பாடல் விஜய்க்கு எதிராக எழுதப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இது ஒருபுறம் புயலை கிளப்ப மறுபுறம் ஆடியோ வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் கூறிய கழுகும் காகமும் கதை பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது ஒருபக்கம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் பேசியது தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இதில் பேசிய அவர், என் தாத்தா ரஜினியை ரசித்தார். நான் ரசிக்கிறேன், எனது மகள் ரசிக்கிறார். எனது பேரனும் பேத்தியும் ரசிப்பார்கள்.அதனை சூப்பர் சுப்பு பாடலில் எழுதிவிட்டார்.
ரஜினி சாருக்கு போட்டியே இல்லையா என்றால் இருக்கிறார். விஜய் சொன்னது மாதிரி ரஜினிக்கு ரஜினியேதான் போட்டி" என்று கூறியிருந்தார். இதில் ரஜினிக்கு போட்டியே இல்லையா என்றால் இருக்கிறார்; 'சகோதரர் தளபதி விஜய்' என சொல்லி சின்ன கேப் விட்ட கலாநிதி மாறன், ரஜினிக்கு போட்டி விஜய்தான் என கலாநிதி சொல்லவருகிறார் என பார்த்தால் 'சகோதரர் தளபதி விஜய் சொன்னது மாதிரி' என மாற்றிவிட்டார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ரஜினிக்கு போட்டி விஜய் தான் என சொல்வார் என்று பார்த்தால் கடைசியில் ரஜினிக்கு ரஜினிதான் போட்டி என சொல்லி முடிச்சுட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“