சினிமா தயாரிப்பாளரும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு வெளியான நளனும் நந்தினியும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ரவீந்தர் சந்திரசேகர். அதன்பிறகு சுட்ட கதை, நட்புன்னா என்னானு தெரியுமா உள்ளிட்ட படங்களை தனது லிப்ரா நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்த அவர், கடைசியாக முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தை தயாரித்திருந்தார். சாந்தனு அதுல்யா ரவி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
தயாரிப்பு மட்டுமல்லாமல், மிக மிக அவசரம் உள்ளிட்ட சில படங்களை விநியோகம் செய்துள்ள ரவீந்தர் சந்திரசேகர், மோசடி வழங்கில் கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளி வந்தார். இதனிடையே தற்போது இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக புகார் வந்ததை தொடர்ந்து, சென்னை அசோக் நகரில் உள்ள ரவீந்தர் வீட்டில் சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
முன்னதாக, நகராட்சி திட்டக்கழிவை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று கூறி, ஒரு தொழிலதிபரிடம் 16 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ரவீந்தர் சந்திரசேகர் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“