தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக யார் சூப்பர் ஸ்டார் என்ற மோதல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்துவிட்டது என்று பிரபல தயாரிப்பாளர் வெளியிட்டுள் பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் சொன்ன பருந்து காக்கா கதை நடிகர் விஜயை குறிப்பிட்டு சொன்னதாக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று திரைத்துறையில் உள்ள நடிகர்களே பலர் கூறி வருவதால் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து அவ்வப்போது வலைதளங்களில் மோதல் வெடித்து வருவது வாடிக்கையாக உள்ளது. இதனிடையே ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நான் ஆசைப்பட்டதே இல்லை என்றும், பல வருடத்திற்கு முன்பே இதை வேண்டாம் என்று கூறயதாகவும், நடிகர் ரஜினிகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற காலம் முடிந்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திரைப்பட வர்த்தகத்தில் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற காலம் முடிந்துவிட்டது. படத்தின் ரிலீஸ் தேதி, கதை, திரைக்கதை, படக்குழு, போட்டி படங்களின் ரிலீஸ் உட்பட அம்சங்கள் தான் அனைத்து நட்சத்திர ஹீரோக்களின் சந்தை மதிப்பை தீர்மானிக்கிறது. தற்போது சினிமா வியாபாரம் எல்லைகளை கடந்து விரிந்துவிட்டது. அதற்கான சிறந்த உதாரணம் தெலுங்கு திரையுலகம்"
அந்தந்த தொழில்களில் உள்ள நட்சத்திரங்கள், வர்த்தகம் மற்றும் ரசிகர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா இடங்களிலும் ஒரு புதிய விதிமுறையாக மாறும் என்றும், வர்த்தகம் மற்றும் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்படத் துறையும் சிறந்த தரத்திற்கு உயரும் என்றும் நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ரஜினிகாந்த் குறித்து அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வரும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், எஸ்.ஆர். பிரபுவின் ட்விட்டர் பதிவை ஷேர் செய்து, "நான் சொன்னப்ப பருந்து குஞ்சுங்க என்ன சவுண்ட் விட்டீங்க. இந்தா வாங்கிக்கங்க. பெசல் ஐட்டம்" என பதிவிட்டுள்ளார். கைதி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த எஸ்.ஆர் பிரபு முன்னணி நடிகரான ரஜினியை சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியுள்ளது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“