புஷ்பா 2 திரைப்படத்தை திரையரங்கில் காண வந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான தியேட்டர் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5-ந் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2 தி ரூல். ராஷ்மிகா, பஹத் பாசில், ஜெகபதி பாபு, ரியோ ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் கொண்டுத்த வெற்றியின் காரணமாக படத்தின் 2-ம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நிலையில், முதல்நாளில் படத்தை பார்க்க தியேட்டரில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக புஷ்பா 2 தி ரூல் படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க, ரசிகர்கள் தியேட்டரில் குவிந்த நிலையில், ஐதராபாத்தில் படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில, நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “சந்தியா திரையரங்கில் நடந்த சோகமான சம்பவத்தால் ஆழ்ந்த மனவேதனை. நினைத்துப் பார்க்க முடியாத இக்கட்டான நேரத்தில் துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதனிடையே புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சம்பந்தப்பட்ட திரையரங்கு மேலாளர் உட்பட 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் காரணமாக ஆந்திராவில் இனி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கே தொடங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“