80-90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதிகா. 1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், நடிகவேள் என்று போற்றப்படும் எம்.ஆர்.ராதாவின் மகள். தொடர்ந்து இனிக்கும் இளமை, பாமா ருக்மணி, இன்று போய் நாளை வா, போக்கிரி ராஜா, பேர் சொல்லும் பிள்ளை என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
90-களின் இறுதியில் சின்னத்திரை சீரியல்களில் என்டரி ஆன ராதிகா, தொடர்ந்து சித்தி, அண்ணாமலை, வாணி ராணி என பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள ராதிகா தற்போது முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் புதுமுக இயக்குனர்களின் படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். அதேபோல் தான் நடிகையாக இருந்த காலக்கட்டத்தில் சிறப்பாக நடனமாடும் திறனையும் பெற்றிருந்தார்.
ஆனால் ராதிகா நடிக்க வந்த புதிதில் தனக்கு நடனம் வராது என்று கூறி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேற முயன்ற சம்பவமும் நடந்துள்ளது. 1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா இந்த படத்தில் நடிகர் சுதாகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
குறிப்பாக மாஞ்சோலை கிளி தானோ என்ற பாடல் பலரின் பாராட்டுக்களை பெற்றது. இந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் நடன இயக்குனர் புலியூர் சரோஜா. இந்த படத்தில் ராதிகாவின் நடனம் குறித்து பேசிய அவர், படத்தில் வரும் மாஞ்சோலை கிளிதானே என்ற பாடலை ஷூட் செய்யும்போது நடு இரவில் ராதிகா பெட்டி படுக்கையுடன் கிளம்பிவிட்டார். அவரது அருகில் படுத்திருந்த நான் எங்க கிளம்பிட்ட என்று கேட்க, என்னால் ஆட முடியாது அக்கா நான் போறேன் என்று சொன்னார்.
அதன்பிறகு அவரை சமாதானப்படுத்தி அந்த பாடலுக்கு நடனமாட வைத்தோம். இந்த நிகழ்வின்போது அவரது அம்மா கூடவே இருந்தார். அடிக்கடி மருந்து வாங்கி வந்து அவருக்கு தடவி விடுவார். அந்த பாடல் முடிந்தவுடன் சிறப்பாக டான்ஸ் ஆடும் நடிகையாக மாறிவிட்டார் ராதிகா என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“