உடல்நலம் சரியில்லாத நிலையில், மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல பிரதாமகன் பட தயாரிப்பாளருக்கு நடிகர் ரஜினிகாந்த் 2 லட்சம் நிதி உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சக்தி சிதம்பரம் இயக்கிய என்னம்மா கண்ணு என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக திரைத்துறையில் அறிமுகமானவர் வி,ஏ.துரை. எவர்கிரீன் மூவி இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலம், லூட்டி, லல்லி, விவரமான ஆளு, பாலாவின் பிதாமகன், விஜயகாந்தின் கஜேந்திரா, நாய்க்குட்டி, ஆகிய படங்களை தயாரித்த இவர், கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு காகித கப்பல் என்ற படத்தை தயாரித்திருந்தார்.
அதன்பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த வி.ஏ.துரை தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் உடல் மெலிந்து பரிதாப நிலையில் இருக்கிறார். மேலும் தனது மருத்துவ செலவுக்காக உதவ வேண்டும் என்று ரஜினிகாந்த் உள்ளிட்ட சில நடிகர்களிடம் உதவி கோரி வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள நண்பரின் வீட்டில் வசித்து வரும் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு நடிகர் சூர்யா 2 லட்சம் நிதியுதவி செய்துள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இயக்குனர் வெற்றிமாறன் ஒரு லட்சம் மருத்துவமனையில் கட்டியதாக வி.ஏ.துரை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் நடிகர் கருணாஸ் ரூ 50 ஆயிரம் நியுதவி அளித்துள்ளார்.
இந்நிலையில், வி.ஏ.துரையின் தற்போதைய நிலையை தெரிந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு உதவி செய்யும் நோக்கில் தனது ஆட்களை அனுப்பி உதவி குறித்து கேட்டுள்ளதாகவும், அவரிடம், வி.ஏ.தறை தனக்கு என்ன உதவி வேண்டும் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வி.ஏ.துரையிடம் விசாரிக்க வந்த ஆட்கள் இந்த தகவலை ரஜினிடம் தெரிவித்த நிலையில், அவர் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அதேபோல் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் அனைத்து மருத்துவ செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ரஜினியின் பாபா படத்தில் எக்ஸிக்யூடியூப் ப்ரடியூசகராக பணியாற்றிய தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு நடிகர் ரஜினிகாந்த் சம்பளமாக 51 லட்சம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/