புதுச்சேரியில், கூலி திரைப்படத்திற்கு உள்ளாட்சி வரியை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில், மலையாள நடிகர் சௌபின், கன்னட நடிகர் உபேந்திரா, இந்தி நடிகர் அமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹான் என முன்னணி நட்த்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் இந்த படத்தில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது, படத்தை பார்த்த பலரும் ரஜினிகாந்த், நாகர்ஜூனா, அமீர்கான் ஆகியோரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், கூலி படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ் படங்களுக்கான உள்ளாட்சி வரிகள் தமிழ்நாட்டில் 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் 25 சதவீதமாக உள்ளது. இதைத்தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரேம் ராஜா, செயலாளர் சோமு மற்றும் உறுப்பினர்கள் நேற்று புதுச்சேரி சட்டசபைக்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது திரைப்பட உள்ளாட்சி வரியை தமிழகத்தை போல் புதுவையிலும் 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை கேட்ட முதல் அமைச்சர் ரங்கசாமி, இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக கூறினார். இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி துறை இயக்குனர் சக்திவேல் உடனிருந்தார். 25 சதவீத உள்ளாட்சி வரியின் காரணமாக புதுவையில் கூலி படத்தை வெளியிட வினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் புதுவையில் கூலி படத்தை வெளியிட முடியாமல் போகலாம் என்று சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர். கூலி படத்திற்கு
உலகளவில் பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இந்த படம் வெளியாகும் அதே தனத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் தயாராகியுள்ள வார் 2 படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.