சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் அதிவேக வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அகஸ்ட் 10-ந் தேதி வெளியானது. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் விநாயகன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம், கடந்த ஆகஸ்ட் 15- சுதந்திர தினத்தன்று இந்தியாவில் 200 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது
அதனைத் தொடர்ந்து ஜெயிலர் படம் வெளியான 7-வது நாளான நேற்று இந்தியா முழுவதும் ரூ 15 கோடிகளை ஈட்டியுள்ளது என்று சாக்னில்க் டிராக்கர் தெரிவித்துள்ளது. இதன் மூலம் படத்தின் மொத்த உள்நாட்டு வசூல் ஒரே வாரத்தில் ரூ.225.65 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெயிலரின் பாக்ஸ் ஆபிஸ் முதல் நாளில் 48.35 கோடி வசூலித்தது. தொடர்ந்து இரண்டாவது நாளில், சிரஞ்சீவியின் போலா ஷங்கர் படம் வெளியானதால் பலத்த போட்டி ஏற்படும் என கணிக்கப்பட்டது.
ஆனால் போலா சங்கர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யததால் ஜெயிலர் சோலோவாக வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதன் மூலம் ஜெயிலர் தென் மாநிலங்களில் பெரும் வெற்றியைப் பெற்றாலும், வட மாநிலங்களில் சன்னி தியோல் நடித்த கதர் 2 படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக ஷாருக்கானின் பதான் படத்திற்கு பிறகு இந்த ஆண்டின் இரண்டாவது அதிக ஹிந்தி வசூல் சாதனை படைத்துள்ளது.
இதனிடையே ஜெயிலர் வசூல் குறித்து வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் கருத்துப்படி, ஜெயிலரின் உலகளாவிய மொத்த வசூல் தற்போது 450.80 கோடி ரூபாயாக உள்ளது. முதல் நாளிலேயே ரூ 95.78 கோடி வசூலித்து உலக பாக்ஸ் ஆபிஸ் பயணத்தைத் தொடங்கியதாக ஆய்வாளர் கூறுகிறார். தமிழ்நாட்டில் படத்தின் வசூல் தற்போது ரூ 159.02 கோடியாக உள்ளது, இது "தமிழ் சினிமா வரலாற்றில் மிக வேகமாக ஏழு நாட்களில் ரூ 150 கோடியை எட்டியது" என்று மனோபாலா விஜயபாலன் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”