சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ஜெயிலர் படம் அதிவேகமாக ரூ 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில் விரைவில் ரூ 400 கோடி வசூல் க்ளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான படம் ஜெயிலர். கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ஜெயிலர் படம் தற்போதுவரை வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், ஆறு நாட்களிலேயே இந்தியாவில் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் ஜெயிலர் படம் விரைவில், உலக அளவில் ரூ.400 கோடியை நோக்கி முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா வரலாற்றில் இதற்கு முன் ரஜினியின் 2.O மற்றும் கபாலி, பொன்னியின் செல்வன் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய 4 படங்கள் மட்டுமே ரூ 400 கோடி வசூலை தாண்டியுள்ளன. இதனால் விரைவில் 5-வது படமாக ஜெயிலர் இணையும் என்று கூறப்டுகிறது. இதனிடையே சுதந்திர தினமான நேற்று (ஆகஸ்ட் 15) ஜெயிலர் படம், இந்தியாவில் சுமார் ரூ. 33 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் படத்தின் இந்திய வசூல் ரூ.207.15 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஜெயிலர் படம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் தமிழக வசூலை விரைவில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனை ஜெயிலரை மாநிலத்தில் அதிக வசூல் செய்த படமாக மாறும் என இண்டஸ்ட்ரி டிராக்கர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார். அதே சமயம் தெலுங்கு பேசும் மாநிலங்களில், சமீபத்தில் வெளியான சிரஞ்சீவியின் போலா ஷங்கர், பாக்ஸ் ஆபிஸில் போராடி வருவதால், ஜெயிலர் படம் தனது வேகத்தை தக்கவைத்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”