ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் நடப்பு ஆண்டின் இறுதியிலோ அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்திலோ தனது படத்தை இயக்க வேண்டும் என்றும் அதற்கான கதையை தயார் செய்யுமாறு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், தொடர்ந்து இயக்கிய கைதி, மாஸ்டர் விக்ரம் என தான் இயக்கிய 4 படங்களையும் வெற்றிப்படங்களாக மாற்றினார். குறிப்பாக அவர் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் இயக்கிய விக்ரம் படம் கமல்ஹாசனின் திரை பயணத்தில் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இதனால் தற்போது கோலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் லியோ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தை முடித்து அடுத்து கைதி படத்தின் 2-ம் பாகத்தையும், அடுத்து, அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், சூர்யா கார்த்தி ஆகியோர் நடிப்பில் கைதி + விக்ரம் படங்களில் இணைப்பான விக்ரம் 3-ம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு முன்னணி நடிகர்கள் சிலர் லோகேஷின் படங்களில் நடிக்க தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.
இதற்கிடையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜை அழைத்து, இந்த ஆண்டின் கடைசியில் அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது தேதிகள் இருப்பதாக உறுதியளித்து தனக்கான ஸ்கிரிப்டை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டதாக வெளியான தகவல் கோலிவுட்டில் பலத்த சலசலப்ப ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சந்திப்பு லோகேஷின் அனைத்து திட்டங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
ரஜினியை இயக்குவது ஒரு அரிய வாய்ப்பு என்பதால் லோகேஷ் மற்றும் அவரது குழுவினர் கமல் மற்றும் கார்த்தியின் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச திட்டமிட்டு ரஜினி படத்தை ஏற்க அனுமதிக்க அவர்களின் பட்டியலில் மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 169’ படத்தை இயக்க கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் லோகேஷ் கனகராஜை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கோவிட் 19 தொற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. அந்தத் திட்டத்துக்குப் பதிலாக ‘விக்ரம்’ படம் உருவாகி வரலாறு படைத்தது. இதனிடையே இவர்கள் இருவரும் இணையும் புதிய படத்திற்கு 2019 இல் ரஜினியும் லோகேஷும் விவாதித்த அதே ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுப்பார்களா அல்லது இது புத்தம் புதியதாக இருக்குமா என்பது இப்போது வரை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த படத்தின் மூலம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) ஒரு அங்கமாக ரஜினி மாறுவாரா என்ற கேள்வியும் உள்ளது. ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார், விரைவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ மற்றும் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 171’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil