தேர்தல் நேரம் அதிகமான மீடியாக்கள் வர மாட்டார்கள் என்று நினைத்தேன். மீடியாவை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று காவேரி மருத்துவமனை கிளை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்றான காவேரி மருத்தவமனையின் புதிய கிளை, வடபழனி ஆற்காடு சாலையில் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், 25 வருடங்களாக நான் எந்த ஒரு கல்லூரி விழாக்களிலும், கல்லூரி கட்டிட திறப்பு விழாக்களிலும் பங்கேற்கவில்லை. காரணம் நான் அந்த விழாக்களில் பங்கேற்றால் அந்த கல்லூரிக்கு நான் ஒரு பார்ட்னர் என்று சொல்லிவிடுகிறார்கள். அதனால் தான் பங்கேற்கவில்லை.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்பதால் இந்த விழாவுக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். அது உண்மை தான். இந்த உடம்பு, இசபெல் மருத்துவமனை தொடங்கி, விஜயா, அப்பல்லோ, காவேரி, ராமச்சந்திரா உள்ளிட்ட பல மருத்துவமனைகளை கடந்து அமெரிக்க சிங்கப்பூர் வரைக்கும் பார்த்துள்ளது. அதனால் மருத்துவர்கள் பற்றியும், செவிலியர்கள் பற்றியும் எனக்கு நன்கு தெரியும். அவர்களின் உதவியாலும், தொழில்நுட்பங்களின் உதவியாலும் தான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
இந்த மருத்துவமனை இருக்கும் இடத்தில் பல படங்களின் ஷூட்டிங் நடந்துள்ளது. அதனைத்து படங்களும் ஹிட் தான். அதேபோல் இந்த மருத்துவமனை நன்கு வளர்ந்து, பலரையும் குணப்படுத்த வேண்டும். முதலில் காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டியில் ஒரு கட்டிடத்தில் தொடங்கினார்கள். அப்போது காவேரி மருத்துவமனை எங்கு இருக்கிறது என்று கேட்டால் கமல்ஹாசன் வீட்டுக்கு அருகில் என்று சொல்வார்கள். இப்போது கமல்ஹாசன் வீடு காவேரி மருத்துவமனை பக்கத்தில் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இதை கேட்டு கமல்ஹாசன் தப்பா நினைக்க கூடாது. மீடியா நண்பர்களே நான் சும்மா சொல்கிறேன். கமல்ஹாசனை கிண்டல் செய்கிறேன் என்று எழுதிவிடாதீர்கள். இந்த நிகழ்ச்சியில் பேச வேண்டாம் என்று நினைத்தேன் கொஞ்சம் மீடியா ஆட்கள் தான் வருவார்கள். சும்மா ரெண்டு வார்த்தை பேசுங்கள் என்று சொன்னார்கள். இங்கே வந்து பார்த்தால் இத்தனை கேமராவை பார்த்தவுடன் பயமா இருக்கிறது. தேர்தல் நேரம் என்பதால் மூச்சுகூட விட பயமாக இருக்கிறது என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“