பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் தீபிகா படுகோன் நடிப்பில் கெஹ்ரையான் என்ற படம் தயாராகியுள்ளது. இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளமான அமேஸானில் வெளியாகிறது.
தீபிகா, சித்தான்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே, தைர்யா கர்வா, நசீருதீன் ஷா, ரஜத் கபூர் ஆகியோர் நடிப்பில் ஷகுன் பத்ரா இயக்கியுள்ள படம் தான் கெஹ்ரையான்.
இந்தப் படத்தை வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் தர்மா புரொடக்ஷன்ஸ் ஃபிலிம் நிறுவனத்துடன் அமேஸான் இணைந்து தயாரித்துள்ளது.
நாளை வெளியாக உள்ள இந்தப் படத்துக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
டிரைலரில் முத்தக் காட்சிகள் இருக்கும்போது இந்தப் படத்துக்கு ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என்று ரசிகர்கள் கருதி வந்த நிலையில், சிங்கில் கட் கூட இல்லாமல் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கி அனுமதி அளித்துள்ளது சிபிஎஃப்சி.
எனினும் சில காட்சிகளில் மட்டும் திருத்தம் செய்யுமாறு படக்குழுவுக்கு சிபிஎஃப்சி குழு அறிவுறுத்தியுள்ளது.
ஆஸ்கர் 2022: பரிந்துரைப் பட்டியலில் உள்ள படங்கள்
மிகவும் பெருமைக்குரிய விருதாக திரையுலகில் கருதப்படும் ஆஸ்கர் 2022 விருதுகள் மார்ச் 27-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
ஆஸ்கர் விருதுப் பட்டியில் இடம்பெற்றுள்ள படங்களின் பட்டியலை காண்போம்.
சிறந்த படம் பிரிவில் பெல்ஃபாஸ்ட், சிஓடிஏ, டோன்ட் லுக் அப், டிரைவ் மை கார், டியூன், கிங் ரிச்சர்டு, லிகோரைஸ் பீட்ஸா, நைட்மேர் அல்லி, த பவர் ஆஃப் டாக், வெஸ்ட் சைடு ஸ்டோரி ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன.
சிறந்த இயக்கம்: பால் தாமஸ் ஆண்டர்சன் (லிகோரைஸ் பீட்ஸா), கென்ன் பிரநாக் (பெல்ஃபாஸ்ட்), ஜேன் கேம்பியன் (தி பவர் ஆஃப் டாக்), ஸ்டீவன் ஸ்பபீல்பெர்க் (வெஸ்ட் சைடு ஸ்டோரி), ஆர்.ஹமகுச்சி (டிரைவ் மை கார்)
சிறந்த நடிகருக்கான பிரிவில் ஜேவியர் பார்டம், பெனிடிக்ட் கம்பர்பாட்ச், வில் ஸ்மித் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் சிறந்த நடிகைக்கான பிரிவில் ஜெஸ்ஸி பக்லி, ஏரியானா டிபோஸ், ஜூடி டென்ச் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ரஷியாவில் ராஷ்மிகா.. கியூட்டான புகைப்படம் என பிரபல நடிகை பாராட்டு
கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகிய புஷ்பா படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், பீஷ்மா, சுல்தான் கிரிக் பார்ட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராஷ்மிகா.
அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளையும் அள்ளி வருவார்.
தற்போது ரஷியாவில் இருப்பதாகக் கூறி செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
அந்தப் புகைப்படம் மிகவும் அழகாக இருக்கிறது என்று நடிகை சமந்தா கமென்ட் செய்துள்ளார்.
புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு படத்தில் பிரபுதேவா
நடிகர் வடிவேலு தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக லண்டன் சென்று திரும்பியபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
கொரோனாவிலிருந்து மீண்டுவிட்ட வடிவேலு அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.
இந்த திரைப்படத்தில் வடிவேலு ஒரு சிறப்பு பாடலை பாடியுள்ளார். அந்த பாடலுக்கு நடன இயக்குனராக நடிகர் பிரபு தேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு ஜோடி 13 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது.
மேலும் இந்த பாடலில் நடிகர் பிரபு தேவாவும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல் இதோ
சாமி, பிதாமகன், சேது உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விக்ரம். இவரது மகன் ஆதித்ய வர்மா என்ற படத்தில் அறிமுகமானார்.
அந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத நிலையில், நடிகர் விக்ரமுடன் சேர்ந்து அவர் நடித்துள்ள மகான் படம் ஓடிடி தளமான அமேசானில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் தந்தை-மகனாகவே இருவரும் நடித்துள்ளனர்.
பேட்ட, பீட்சா, இறைவி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
மெட்ராஸ், காலா, கபாலி உளளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்காக துருவ் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார்.
பாடலாசிரியர் விவேக் உடன் இணைந்து அவர் இந்தப் பாடலை எழுதி பாடியுள்ளார்.
இந்தப் பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “