மயோசிடிஸ் என்னும் தோல் நோயால் அவதிப்பட்டு வரும் “சமந்தா” நடிப்பில் வெளியாகியிருக்கும் “சகுந்தலம்” படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
விசுவாமித்திராருக்கும் மேனகைக்கும் பிறந்த குழந்தைதான் சகுந்தலா. ஆனால் மேனகை சகுந்தலாவை குழந்தையாக இருக்கும்போதே ஒரு காட்டில் விட்டு விடுகிறார். அதன் பிறகு அங்குள்ள ஒரு ரிஷி சகுந்தலாவை எடுத்து வளர்க்கிறார்.இயற்கை மற்றும் வன விலங்குகளை மட்டுமே தன்னுடைய நண்பர்களாக கொண்டு சகுந்தலா வளர்கிறாள். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து காட்டுக்கு வேட்டையாட வரும் அரசன் துஷ்யந்தன் சகுந்தலாவின் மீது காதல் வயப்படுகிறார். சகுந்தலாவிற்கும் துஷ்யந்தனை பிடித்து போக இருவரும் இயற்கை சாட்சியாக திருமணம் செய்து கொள்கிறார்கள்.
சிறிது காலம் கழித்து மீண்டும் தன் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற நெருக்கடியான சூழலில், சகுந்தலாவை காட்டிலேயே விட்டுவிட்டு தன் நாட்டிற்கு திரும்புகிறார் துஷ்யந்தன். இதனிடையே பல ஆண்டுகள் கழித்தும் துஷ்யந்தன் தன்னைக் காண வராத நிலையில் சகுந்தலா சோகமாக அவனது நினைவில் அமர்ந்திருக்கிறாள், அப்போது கோப முனியான துர்வாசகர் சகுந்தலாவிடம் ஏதோ கேட்க ,அவள் பதில் சொல்லாததால், கோபமடைந்து இனி துஷ்யந்தனுக்கு உன் நினைவே இருக்காது என சாபம் விடுகிறார். அதன் பிறகு சகுந்தலாவின் நினைவை இழந்த துஷ்யந்தன் சகுந்தலாவின் காதலை ஏற்றாரா? இல்லையா? என்பதே கதை.
பாசிட்டிவ்ஸ் :
சமந்தாவின் அழகும் ரசிக்கும் படியான நடிப்பும் மட்டுமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம். மற்றபடி பின்னணி இசை ஓரளவுக்கு படத்திற்கு பொருந்தி இருக்கிறது. ஒரு சில இடங்களில் காட்சிகளில் காட்டப்படும் இடங்களும், சூழ்நிலைகளும் நம்மை பிரமிக்க வைக்கிறது. தேவ மோகன் பிரகாஷ்ராஜ் மது மற்றும் கௌதமி ஆகியோர் தங்களுக்குரிய கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியின் திரைக்களம் ஓரளவுக்கு நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.
நெகடிவ்ஸ் :
இது புராண கதையா அல்லது ஹிந்தி சீரியலா? என்று குழம்பும் அளவிற்கு முதல் பாதியின் திரைக்கதை மிகவும் பொறுமையாக சென்று,ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. VFX காட்சிகள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். CG காட்சிகள் எல்லாம் படுமோசமாக அமைந்திருக்கிறது. வலுவில்லாத திரைக்கதையால் நம்மால் பெரிய அளவில் படத்தை ரசிக்க முடியவில்லை என்பதே உண்மை. மொத்தத்தில் உங்களுக்கு பொறுமை இருந்தால் இப்படத்தை சமந்தாவிற்காக ஒரு முறை பார்க்கலாம்.
நவீன் குமார்