"பேய்-சந்தானம்" கூட்டணியில் ஏற்கனவே வெளியாகிய இரண்டு படங்களும் வெற்றி அடைந்துள்ள நிலையில் அதே பாணியில் தயாரான டிடி ரிட்டன்ஸ் ("DD Returns") படம் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படமும் ரசிகர்களை கவர்ந்ததா?
கதைக்களம்:
பல ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரியில் வாழ்ந்த ஒரு குடும்பம் சூதாட்டத்தில் ஈடுபடுகிறது. அங்கே சூதாட்டத்தில் தோற்பவர்களை கொல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அந்த குடும்பத்தை ஊர் மக்கள் எரித்துக் கொல்கிறார்கள். இதனிடையே தற்போது நிகழ் காலத்தில் பாண்டிச்சேரியில் பணக்காரராக இருக்கும் பெப்சி விஜய்னிடம் பணம்,நகை முதலியவற்றை முனீஷ்காந்த் குழு கொள்ளை அடிக்கிறது. மறுபுறம் பிபின் போதைப் பொருள் பிசினஸில் சம்பாதிக்கும் பணத்தை மொட்டை ராஜேந்திரன் குரூப் கொள்ளை அடிக்கிறது. அடுத்து நாயகி சுரபியை மீட்க சந்தானத்திற்கு 25 லட்சம் தேவைப்படுகிறது.
இந்நிலையில் பிபின் குழு கொள்ளையடித்த பணத்தை மொட்டை ராஜேந்திரன் குழு கைப்பற்றுகிறது. அடுத்து அந்த பணத்தை சந்தானம் கைப்பற்றுகிறார். மேலும் மீதமுள்ள பணத்தை போலீசுக்கு பயந்து அந்த பேய் பங்களாவில் மறைத்து வைத்து விடுகின்றனர். அந்த பணத்தை எடுக்க போகும்போது ஏற்கனவே எரித்துக்கொல்லப்பட்ட வில்லன் பிரதீப் ராவத் குடும்பம் இவர்களை வைத்து கேம் ஆடுகிறது. விளையாட்டில் வென்றால் பணம் இல்லை என்றால் மரணம் என்று சூழ்நிலைக்கு அனைவரும் தள்ளப்படுகிறார்கள். இதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? பணத்தை கைப்பற்றினார்களா? என்பதை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி இருக்கும் படமே "டிடி ரிட்டன்ஸ்
நடிகர்களின் நடிப்பு :
கடந்த சில படங்களாக சீரியஸ் ரோலில் நடித்த சந்தானத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை புரிந்த சந்தானம் தனது வழக்கமான பாணியான காமெடியை இப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். தன் வழக்கமான காமெடி பஞ்சுகளால் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கிறார் சந்தானம். இதைத் தவிர முனீஸ் காந்த்,ரெடின் கிங்சிலி, பிபின், பெப்சி விஜயன்,மாறன் என நகைச்சுவை ஜாம்பவான்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை இடைவிடாது சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடித்திருப்பதால் இவர்களின் முழு நகைச்சுவை திறனை வெளிப்படுத்தும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. நாயகியான சுரபிக்கு இவர்களுக்கு மத்தியில் நடிக்க பெரிய அளவு கேரக்டர் இல்லை. வில்லன் பிரதீப் ராவத்தின் வித்தியாசமான பேய் கதாபாத்திரம் சில இடங்களில் திகிலையும் பல இடங்களில் காமெடியையும் கொடுத்து நம்மை ரசிக்க வைக்கிறது.
இயக்கம் மற்றும் இசை ;
தில்லுக்கு துட்டு 1,2 படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் ராம் பாலாவின் அசிஸ்டன்டான பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தன்னுடைய குரு கையாண்ட அதே பாணியை தான் இவரும் கையில் எடுத்திருக்கிறார். பேய் படங்களுக்கென்றே உரித்தான திகில் காட்சிகளை குறைத்து காமெடி காட்சிகளை அதிகம் வைத்து ரசிகர்களை காமெடி கடலில் மூழ்கடிக்க செய்திருக்கிறார். ரோஹித் ஆபரஹமின் பாடல்கள் படத்திற்கு தேவை இல்லை என்பது போல தோன்றினாலும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
படம் எப்படி :
படம் தொடங்கியது முதல் முடியும் வரை மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இப்படத்தை சந்தானம் குழு கொடுத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றார் போலவே ஒவ்வொரு காட்சிகளிலும் நகைச்சுவை சரவெடி பறக்கிறது பேய் படங்களில் லாஜிக் என்பதை நாம் மறந்து விட வேண்டும் என்பதற்கேற்ப பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் காமெடி காட்சிகள் அதனை சரி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. அரசியல்வாதிகள் முதல் சினிமா நடிகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். ஆனால் படத்தில் சில இடங்களில் வரும் காட்சிகளும், வசனங்களும் நாம் குடும்பத்துடன் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறது.
மொத்தத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் ஒரு காமெடி ரோலர் கோஸ்டர் படமாக "DD Returns" அமைந்திருக்கிறது.
- நவீன் சரவணன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“